‘வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவது மூலம் தமிழக அரசுக்கு ரூ.10.20 கோடி வருவாய்’

சென்னை: வேளாண் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம், வாடகைக்கு விடும் திட்டத்தால் ரூ.10.20 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வேளாண் பொறியியல் துறை தலைமை அலுவலகத்தில், வேளாண் பொறியியல் துறை திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: “கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இ-வாடகை’ ஆன்லைன் செயலி மூலம், 2022-23-ஆம் ஆண்டில் 21,166, 2023-24-ஆம் ஆண்டில் 30,963 விவசாயிகள் பயனடைந்தனர். இதனால் அரசுக்கு ரூ.10.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.

முதல்வர் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டில் பெய்த பெருமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்தி 3330.40 ஏக்கர் பரப்பளவில் 2182 விவசாயிகள் பயனடையும் வகையில் மணல் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.20 கோடி செலவில், 4961 கிமீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது. நீராதாரங்களை மேம்படுத்தவும், கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் இதுவரை 1,924 பண்ணைக் குட்டைகள் தனிப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் அமைத்துத் தரப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடர்பான பயிற்சி முகாம்கள், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற முகாம்கள் மற்றும் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். மேலும், சூரிய சக்தி பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்கும் திட்டம், 100 சதவீத மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், நீர்சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்தல் போன்றவற்றை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தும் வகையில் வெற்றிக் கதைகளை துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி மற்றும் செய்தி குறிப்பின் வாயிலாக பிரபலப்படுத்த வேண்டும்,” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து, நந்தனம் சர்க்கரைத்துணை ஆணையர் அலுவலக்தில், நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், “கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கும், ஆலை செயல்பாடுகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், வேளாண்துறை செயலர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.