இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, டேனியல், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்திற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், திருச்சியில் உள்ள திரையரங்குகளில் படத்தை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி காட்சிகளுக்கு ஆர்வமுடன் ரசிகர்கள் வரத் தொடங்கினர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்.ஏ திரையரங்கில் தங்கலான் படம் பார்ப்பதற்காகத் தங்கலான் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்தது போன்ற வேடமிட்டு ஆறு பேர் வந்தனர்.
ஆறு பேரும் சட்டை அணியாமல் வந்தனர். அவர்களைப் பார்த்து, தியேட்டரில் குழுமியிருந்த விக்ரம் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால், குஷியான அவர்கள் அந்த கெட்-அப்பில் தியேட்டரில் வலம் வந்தனர். இந்நிலையில், அவர்கள் தியேட்டர் உள்ளே செல்ல முயல, அவர்களைத் தடுத்து நிறுத்திய திரையரங்க ஊழியர்கள், சட்டை அணிந்தால் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிப்போம் எனக் கூறினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், திரையரங்க நிர்வாகிகள் சட்டை அணிந்தால் மட்டுமே அனுமதிப்போம் என உறுதியாகக் கூறியதால், ஒரு கட்டத்திற்குப் பின் ஆறு பேரும் சட்டை அணிந்து வந்தனர். அதன் பின் அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.