திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பெற்றுத் தந்ததற்காகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலில் பணியாற்றி நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைக் குவித்திட பாடுபட்ட, திமுகவினர், தோழமை இயக்கத்தினர், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திமுகவின் பவளவிழா ஆண்டு நிறைவினை, கட்சி தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று கொண்டாடவிருப்பதை முன்னிட்டு இந்த முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் திமுக படைத்த சாதனைகள் – திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகத்தான திட்டங்கள் – திராவிட மாடல் அரசைத் திறம்பட நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள்நலத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிச் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுவதுடன், தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் நிகழ்வுகளுடன், திமுக கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கட்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் கொடியை ஏற்றிவைக்கவும், அனைத்து ஊர்களிலும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளைப் பொலிவுபடுத்தி மாலையிட்டு மரியாதை செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கருணாநிதியின் புகழினைப் போற்றுகிற வகையில் இந்திய அரசு 100 ரூபாய் மதிப்பிலான கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகச் சொல்லி மத்திய பாஜக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருச்சி தெற்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 101 நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடித்த மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பாராட்டுத் தெரிவித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.