கொல்கத்தா: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பேரன் சந்திர குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனும்மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திர குமார் போஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆளுமை, புத்திசாலித்தனம், அசாதாரண தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் சுதந்திர போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு ஆகியசெயல்பாடுகளால் இந்தியர்களின் இதயங்களில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் இதயங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றென்றும் ஒரு ஹீரோவாக திகழ்கிறார்.
நேதாஜி மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது. இதன்படி நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் விமான விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 18-ம் தேதி (இன்று) நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த தருணத்தில், ஜப்பானின் ரென்கோஜியில் உள்ளஅவருடைய அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சந்திர குமார் போஸ் கூறியுள்ளார்.