கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தடயங்கள் அழிக்கப்படவில்லை என்பதை புகைப்படங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் (33)என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 14-ம் தேதி இரவு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்த 7,000 பேர் கும்பல், பெண் மருத்துவர் பணியாற்றிய நெஞ்சக பிரிவை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் வழக்கின் முக்கிய தடயங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் பெண் மருத்துவர் கொலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம், நீதிபதி ஹிரன்மாய் பட்டாச்சார்யா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் பட்டாச்சார்யா கூறியதாவது:
கடந்த 14-ம் தேதி இரவு ஆர்.ஜி.கர் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 7,000 பேர் கொண்ட கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்தது.
பெண் மருத்துவர் கொலை வழக்கோடு தொடர்புடைய தடயங்களை அழிக்கவே அந்த கும்பலை யாரோ சிலர் ஏவி விட்டுள்ளனர்.
கும்பல் தாக்குதல்: 3-வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவரின் உடல் மீட்கப்பட்டது. அங்குள்ள தடயங்களை அழிக்க வன்முறை கும்பல் முயற்சி செய்தது. கருத்தரங்கு கூடத்தை தேடி அலைந்தது. ஆனால் தவறுதலாக 2-வது மாடியில் உள்ள அனைத்து பிரிவுகளையும் கும்பல் சூறையாடிவிட்டு தப்பியோடியது. இவ்வாறுவிகாஸ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் பெரோஸ் கூறும்போது, “வன்முறை கும்பல் எங்கிருந்து வந்ததுஎன்பது தெரியவில்லை. அவர்களை விரட்டியடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன, தடியடி நடத்தப்பட்டது. ஆனால் போலீஸாரை தாக்கிவிட்டு கும்பல் உள்ளே நுழைந்துவிட்டது. கருத்தரங்கு கூடத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எந்த தடயமும் அழிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சிவஞானம் கூறியதாவது: தடயங்கள் அழிக்கப்படவில்லை என்பதை புகைப்படங்களுடன் நிரூபிக்க வேண்டும். ஆர்ஜி கர்மருத்துவமனை மீதான தாக்குதல் அரசு நிர்வாகத்தின் செயலற்றதன்மையை காட்டுகிறது. பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அவர்கள் எவ்வாறு சுதந்திரமாக பணியாற்ற முடியும்? அவர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
கருத்தரங்கு கூடத்துக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுவதாக ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த கட்டிடத்தை இப்போது இடிப்பது ஏன்? இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பெண் மருத்துவர் கொலை வழக்கை தாமதப்படுத்த முயற்சி செய்யக்கூடாது. வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்த கட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆகஸ்ட் 21-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்.
இவ்வாறு தலைமை நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.