புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலுள்ள டிஎல்எஃப் மற்றும் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் வணிக வளாகங்களுக்கு சனிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதில் டிஎல்எஃப் வணிக வளாகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது என்று அதன் நிர்வாகத்தினர் பின்னர் தெரிவித்தனர்.
குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு வந்திருந்த மிரட்டல் மின்னஞ்சலில், கட்டிடத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வதற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்கள் என இரண்டு நபர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் நொய்டாவில் உள்ள டிஎல்எஃப் வணிக வளாகத்துக்கும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அந்த மாலுக்கு விரைந்த போலீஸார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மின்னஞ்சலில் வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் இறக்கப்போவதாகவும், யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வெடி குண்டு மிரட்டலைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் ஒடிக்கொண்டிருந்த ஒரு திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் பணியாளர்கள், பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீஸார் அறிவுத்தினர்.
இதனிடையே, நொய்டா டிசிபி ராம் பதான் சிங் கூறுகையில், “டிஎஃப்எல் வணிக வளாகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பரந்த அளவிலான பகுதிகளில் யாருக்கும் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதி செய்ய இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி ஒத்திகையில், மோப்ப நாய்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸ் குழுக்கள் பங்கேற்றன” என்று தெரிவித்தார்.