சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு ஆக.18 முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஆக.18-ல் 130 பேருந்துகளும், 19-ல் 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து ஆக.18-ல் 30 பேருந்துகளும், 19-ல் மாதாவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இருக்கை, படுக்கை வசதி கொண்ட ஏசி 50 பேருந்துகள், 19-ம் தேதி இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஆக.19-ம் தேதி 265 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதன்படி, சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.