மாநாட்டு தேதி அறிவிப்புக்கு முன்னதாக நடிகர் விஜய் கட்சியின் கொடி ஆக.22-ல் அறிமுகம்?

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஆக.22-ம் தேதி அவர் சென்னையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்தார். உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் உட்பட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டைமிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்தொடர்ச்சியாக மதுரையில் மாநாட்டை நடத்தப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடம் மாநாடு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக்கூறி சேலம், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநாட்டுக்கான இடம் தேடும் பணி தொடர்ந்தது.

விக்கிரவாண்டியில் மாநாடு? – இதற்கிடையில், விஜய் மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கு பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலையீடுதான் காரணம் என தவெக நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தற்போது விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பல ஏக்கர் காலி இடத்தை புஸ்ஸி என்.ஆனந்த் தேர்வு செய்திருப்பதாகவும் அங்கு செப்.22-ம் தேதிமாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஆக.22-ம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியைவிஜய் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொடியில் 2 வண்ணங்கள் இடம்பெறும் வகையில் 3 வகையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரு கொடியை விஜய் தேர்வு செய்துள்ளதாகவும், அதனையே அவர் அறிமுகம் செய்யஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘தற்போது வரை ஆலோசனைக் கூட்டம், கட்சிக் கொடி அறிமுகம், விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டம் என்பது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தலைமையிடம் இருந்து வரவில்லை,’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.