சென்னை: “சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்” என்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகரில் ஆண்டுதோறும் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 20 இடங்களுக்கு மேல் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல இடங்களில் மழைநீர் வடிகால் பாதைகள் அடைபட்டுள்ளன. இதனால் வெள்ள பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்த நிலையில், மாற்று பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகிய துறைகள் சார்பில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மற்றும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.
குறிப்பாக வளசரவாக்கம் மண்டலம், போரூர் சந்திப்பு பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால முன்னேற்பாட்டுப் பணிகள், நீர்வளத்துறை சார்பில் ஆலந்தூர் மண்டலம், கெருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், போரூர் ஏரி உபரிநீர் வெளியேறும் கொளப்பாக்கம் கால்வாய் இரண்டாகப் பிரியும் இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், மணப்பாக்கம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகள் அனைத்தையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும் என்று தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி, மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைத் துறை செயலர் ஆர்.செல்வராஜ், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர் நொளம்பூர் வெ.ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.