வயநாடு மீட்டுப் பணியில் ஈடுபட்ட செவிலியர் சபீனாவுக்கு, கல்பனா சாவ்லா விருது வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
நாட்டையே சோகத்தில் மூழ்கடித்திருக்கும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 17 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், வரலாறு காணாத இந்தப் பேரழிவு ஏற்படுத்தியிருக்கும் பேரிடரில் இருந்து வயநாடு மக்கள் இன்னும் மீளவில்லை. உயிரிழப்பு 400-ஐ கடந்திருக்கிறது. காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் நிலை இன்னும் புலப்படவில்லை. இத்தனை நாள்களாகியும் தொடரும் மீட்பு பணிகளின் போது கிடைக்கும் அழுகிய உடல் பாகங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
பேரிடரில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஓடோடி உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள், ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரின் அர்ப்பணிப்பையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சேவையின் மறு வடிவமாகப் பார்க்கப்படும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
அந்த வரிசையில், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவின் பேரிடர் களப்போராட்டத்தை உள்ளுர் மக்கள் முதல் சுகாதாரத்துறை அமைச்சர் வரை பாராட்டி வந்த நிலையில், வீரதீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதை அவருக்கு வழங்கி மரியாதை செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த செவிலியர் சபீனாவிடம் பேசினோம். ” கூடலூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வருகிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் நபர்களுக்கு ஊக்கமளித்து சிகிச்சை அளிப்பதுதான் முக்கியப் பணி. நிலச்சரிவு தொடர்பான தகவல் கிடைத்த சில மணி நேரத்திலேயே சூரல் மலைக்குச் சென்றுவிட்டோம். இடமே உருக்குலைந்து கிடந்தது. அடுத்த நிலச்சரிவு ஏற்படலாம் என எங்களையும் வெளியேறச் சொல்லி மீட்புக் குழுவினர் கட்டாயப்படுத்தினார்கள். மருத்துவ சேவை என்றதும் உள்ளே அனுமதித்தார்கள்.
காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. மறுகரையில் நூற்றுக்கணக்கான மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்து வேதனையாக இருந்தது. எப்படியாவது ஆற்றைக் கடந்து அங்கிருந்த மக்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. செவிலியர்களில் ஆண்கள் இருக்கிறார்களா என மீட்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். நான் முதலில் சென்றேன். தயங்கினார்கள். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு மட்டுமே ஜிப் லைனில் கடக்க வேண்டும் என்பதால் எனக்கு பெல்ட் அணிவிப்பதில் அவர்களுக்கு சற்று தயக்கம் இருந்தது. நானே பெல்ட்டை அணிந்து கொண்டு ஜிப் லைனில் கடக்க ஆரம்பித்தேன்.
பெல்ட் லூசாக இருப்பதாக ராணுவ வீரர்கள் பயந்து கொண்டே இருந்தார்கள். ஆர்ப்பரிக்கும் காட்டாறு கால்களுக்குக் கீழே ஓடுவதைக் கண்டு கூட பயப்படவில்லை. மறுகரையை அடைந்தேன். பிணக்குவியல்கள், காயம்பட்ட மனிதர்கள், கண்ணீர் வற்றிய உறவினர்கள் என நரகத்தைப் போல இருந்தது. மனதை ஒருமுகப்படுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.
உயிரற்ற உடல்களையும் காயம்பட்ட மக்களையும் ஒரே ஜீப்பில் பார்த்து எனக்கும் கண்ணீர் வற்றியது. டீ, பிஸ்கட், தண்ணீர் கூட குடிக்க மனம் வராமல் இரவு 12 மணி வரை மக்களுடன் இருந்தேன். வாழ்வில் மறக்கவே முடியாத நாள் அது. நான் மட்டுமல்ல, என்னுடைய இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் பதறிக் கொண்டுதான் உதவ ஓடியிருப்பார்கள்” என்றார் தன்னடக்கத்துடன்.