பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனிடையே இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார் இந்த நிலையில் வினேஷ் போகத் மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பேசியுள்ள அவரது பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் கூறியதாவது,
எடை குறைப்புக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்று பயந்தேன். .வினேஷ் என்னிடம் பேசிய போது, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையை (ஜப்பானின் யுகி சுசாகி) தோற்கடித்து உள்ளேன். நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை யாராலும் பறிக்க முடியாது. என்று கூறியதாக வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.