சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளினால் மகிழ்ச்சியில் திளைக்கிறது தமிழ் சினிமா.
70வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த 2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள்தான் நேற்று அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்திற்கு நான்கு விருதுகளும், ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய விருது தேர்வுக் குழுவில் ஜூரிக்களாக (தேர்வுக் குழுவினர்) பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சார்பில் இயக்குநரும், தமிந்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவருமான ஆர்.வி.உதயகுமார் ஜூரியாகச் செயல்பட்டு படங்களைத் தேர்வுக்குழுவின் பிற உறுப்பினர்களுடன் இணைந்து தேர்வு செய்துள்ளார்.
இந்த விருதுகளைத் தேர்வு செய்த நடந்த பிராசஸ் குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடமே பேசினோம்.
“ரொம்ப சந்தோஷமா இருந்தது. இது ஒரு பிரமாதமான அனுபவம். தமிழ்நாட்டுல இருந்து நான் ஒருத்தன்தான் இருந்தேன். விருதுக்குப் படங்களைத் தேர்வு செய்வது என்பது பொறுப்பான வேலை என்பது மட்டுமல்ல… விருதுக்கென அனுப்பி வைத்த படங்கள் அத்தனையையும் பொறுமையாகப் பார்க்கற வேலை இது. சவாலானதாகவே இருந்தது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் அத்தனை மொழி படங்களையும் பார்க்க வேண்டியதா இருந்துச்சு. ஒரு விருதுக்குக் குறைந்தது பத்து படங்களாவது வந்திருக்கும். அதுல எது பெஸ்ட்னு பார்க்கறது சிரமம்தான்.
சில மொழிப் படங்கள் பார்க்கும்போது எனக்குப் புரியலைனா, என்ன சொல்றாங்கனு கேட்பேன். அதுக்கு அவங்க மொழியிலிருந்து எனக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லுவாங்க. நாமளும் கன்வின்ஸ் ஆவோம். இப்படி ஒவ்வொரு படத்தையுமே கவனமாகத்தான் பார்த்தோம். ஒவ்வொரு படங்களுக்கும் விவாதம் நடந்தது. எதனால ஒரு படத்தை விரும்புறோம், அதன் சிறப்பு என்ன, அதுக்கு ஏன் விருது கொடுக்கணும், இப்படி எல்லாம் விவாதம் நடந்தது. எல்லாருமே கலந்து பேசினோம். ஒருமனதாகப் பேசி, ரொம்ப நேர்மையாகதான் இந்த விருதுகளைத் தேர்வு செய்திருக்கிறோம். அந்தச் குழுவிலிருந்தது ஓர் இனிமையான அனுபவம்தான்!” என நெகிழ்கிறார் ஆர்.வி.உதயகுமார்.