சமீபத்தில் வெளியான `ராயன்’ படத்தில் இயக்குநர், நடிகர் என டபுள் ட்ராக்கிலும் நல்ல பெயர் வாங்கினதில் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தனுஷ். அதிலும் இயக்குநராக அவருக்குக் கிடைத்த பாராட்டுகளால், அடுத்து இயக்கிவரும் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் வேலைகளில் இன்னும் தீவிரமாகிவிட்டார். இதற்கிடையே அவர் நடிக்கும் பிற படங்களும் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன.
தனுஷின் 51வது படமான ‘குபேரா’ தெலுங்கு, தமிழ் இரண்டிலும் வெளியாகிறது. தெலுங்கில் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதற்கு முன் அங்கே அவர் ‘ஹேப்பி டேஸ்’, ‘கோதாவரி’, ‘ஃபிடா’, ‘லவ் ஸ்டோரி’, ‘லீடர்’ எனப் பல ஹிட் படங்களின் இயக்குநர் என்பதால் அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கின் முன்னணி நாயகர்களே விரும்புவார்கள். இப்போது தனுஷை வைத்து அவர் இயக்கிவரும் ‘குபேரா’வில் நாகார்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாலிவுட் நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர். ஹைதராபாத், பேங்காக் எனப் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டது. தனுஷின் போர்ஷன் மட்டும் இன்னும் 10 நாள்கள் படமாக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அத்தோடு முழுப்படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது.
அதைப் போல ‘ராயன்’ படத்திற்கு பின் தனுஷ் இயக்கி வரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ், ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
‘ராயன்’, ‘குபேரா’ இரண்டு படப்பிடிப்புகளுக்கிடையே இந்த படத்தின் ஷூட்டிங்கையும் அவ்வப்போது நடத்தி வந்தார் தனுஷ். இதில் அவர் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார் என்றும் தகவல். இன்னும் 30 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. கடந்த பிப்ரவரியில் காதலர் தின ஸ்பெஷலாகப் படத்தின் அறிவிப்பு வெளியானது. அதைப் போல வரும் காதலர் தினத்திற்கு இந்தப் படத்தைக் கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இளையராஜாவின் பயோபிக்குக்கு தனுஷ் செல்வார் என்று தெரிகிறது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் தனுஷுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பாதால், அந்தப் பிரச்னைக்கு தீர்வு எட்டிய பிறகே அவர் அடுத்த படத்திற்குச் செல்ல முடியும் என்கின்றனர்.
இதற்கிடையே ‘இளையராஜா’ பயோபிக் படத்திற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. படப்பிடிப்பிற்கான லொக்கேஷன்களை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பார்த்து வருகிறார். இளையராஜா தான் பிறந்து வளர்ந்த இடங்களுக்கு இயக்குநரை அழைத்துக் கொண்டு சுற்றிக் காண்பித்ததோடு, தான் வளர்ந்த ஊர்களை எல்லாம் சொல்லி, அங்கும் லொக்கேஷன் பார்க்கச் சொல்லியிருக்கிறார். படத்தின் புரொடக்ஷன் டிசைனரும், கலை இயக்குநருமான முத்துராஜிடம் அந்தக் காலத்தில் தன் கிராமத்தில் உள்ள இடங்கள், வீடுகள் எப்படியிருந்தன, எப்படி செட்கள் அமைய வேண்டும் என தனது இன்புட்ஸ்களைக் கொடுத்துள்ளார். நீரவ் ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மேற்கண்ட கமிட்மென்ட்களை முடித்த பிறகே பாலிவுட்டில் ‘அட்ராங்கி ரே’, ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் அடுத்த படத்திற்குச் செல்கிறார் தனுஷ்.