இன்று மாலை வெளியாகப்போகும் `The Greatest of All Time’ (The G.O.A.T) படத்தின் டிரெய்லர் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், ஆனந்த விகடன் பேட்டிக்காக நாம் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பேசிய வகையில் சில எக்ஸ்க்ளூசிவ் செய்திகள் கிடைக்கப்பெற்றன. அவை அப்படியே இங்கே…
– இன்று வெளியிடப்படும் டிரெய்லரில் சில ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. நிச்சயமாக சர்ப்ரைஸிங்கான ஒரு விஷயம் இதில் கட்டாயமுண்டு.
– படத்தின் கதையின் போக்கு எப்படியிருக்கும் என்று சொல்வதற்காகவே இதில் சில அடிப்படை விஷயங்கள் தெரிவிக்கப்படும்.
– படத்தில் தன் அப்பாவும், பெரியப்பா இளையராஜாவும் பங்குபெற வேண்டும் என்று ஆசைப்பட்டார் வெங்கட் பிரபு. அதன்படி கங்கை அமரன் ஒரு பாடல் எழுதியிருக்க, அதற்கு இசை அமைத்திருந்தார் யுவன்.
– அதேபோல் இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும் என்று வெங்கட் பிரபு விரும்ப, அந்த விஷயம் இளையராஜாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் அதற்குப் பதில் சொல்லாமல் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ராஜா. அநேகமாக முகப்பில் ஓப்பனிங் சாங்காக அவர் பாடுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றே தெரிகிறது.
– அது நடக்காவிட்டாலும், இளையராஜா இசையமைத்து, பாடி புகழ்பெற்ற ஒரு பாடலைப் படத்தின் முக்கியமான பகுதியில் வைத்திருக்கிறார்கள். ரெட்ரோ பாடல்கள் சமீபத்திய தமிழ்ப் படங்களில் தவறாமல் இடம்பெற்று வரும் நிலையில் அந்த டிரெண்டில் ‘தி கோட்’டும் இடம்பிடிக்கிறது. ஆனால் அந்தப் பாடல் எது என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
– படத்தில் நிறைய நடிகர்கள், குறிப்பாக பிரஷாந்த், மோகன், சினேகா, பிரபுதேவா என சீனியர்கள் பட்டாளமே அதிகம் இருக்கிறது. இந்த அனைத்து நடிகர்களும் டிரெய்லரில் கட்டாயம் இடம்பெறுவார்கள் என்கின்றனர்.
– நடிகர் சிவகார்த்திகேயன் இதில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாகச் செய்திகள் ஏற்கெனவே வெளியாகின. அவர் தோன்றும் ஷாட்டே டிரெய்லரில் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
படத்தின் நான்கு பாடல்கள் தவிர இன்னும் சில குறும்பாடல்கள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ‘The GOAT’ தான் விஜய்யின் கடைசி படம் என்ற செய்தி அடங்கி, இயக்குநர் அ.வினோத் இயக்கும் அடுத்த படமும் அவர் வாயாலேயே உறுதி செய்யப்பட்டு விட்டதால் இன்னும் சந்தோஷமாகவே இந்தப் படத்தையும் இன்று வெளியாகும் டிரெய்லரையும் பார்க்கத் தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.