புதுடெல்லி: தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதே திட்டத்தின் கீழ் புதிதாக 45 பேரை நியமிக்க மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நேரடி நியமனம் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு முயற்சி செய்கிறது. உத்தர பிரதேசத்தில் இடஒதுக்கீடு விதிகளை மீறி 69,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நியமனங்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அரசு பணிகளில் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது. இதை முறியடிக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நேரடி நியமனம் மூலம் இட ஒதுக்கீடுஉரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், ஏழைகளின் உரிமைகள் திருடப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நீங்கள் அனைவரும் விழித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.