சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடலோர காவல் படை இயக்குநர் ஜென்ரல் ராகேஷ் பால் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவை அடுத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை திறந்து வைக்கவும், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்திருந்தார்.
முதலில், அதி நவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டித்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துகொண்டிருந்தபோது, பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்த இந்திய கடலோர காவல் படை இயக்குநர் ஜென்ரல் ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இரவு 7.10 மணிக்கு உயிரிழந்தார்.
அதி நவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டித்தை திறந்து வைத்துவிட்டு, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, அவர் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியை முடித்துவிட்டு ராஜ்நாத் சிங் நேராக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் முதல்வர் மு.,க.ஸ்டாலினும் சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து இருவரும் கேட்டறிந்தன்ர். பின்னர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் கேட்ட போது, “அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது, அவருக்கு பல்ஸ் குறைந்துவிட்டது. ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் மரணமடைந்துவிட்டார்” என்றார்.