யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இது போன்ற நேரங்களில் யானைகள் பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டியடிப்பது வழக்கம். மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் தரம்பூர் ராஜ் கல்லூரி காலனி வளாகத்திற்குள் 6 காட்டு யானைகள் புகுந்தன. அந்த யானைகள் சுவர்களை உடைத்து சேதப்படுத்தின. அதோடு இங்குள்ள முதியவர் ஒருவரையும் தாக்கிக் கொன்றன. இதையடுத்து காட்டு யானைகளை விரட்டுவதற்கு பயிற்சி பெற்ற ஹுல்லா அணியைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தீப்பந்தங்களைக் கொண்டு யானைகளை விரட்டியடித்தனர்.
அவர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை யானைகள் மீது எறிந்தனர். அங்குள்ள மைதானத்தில் யானைகள் நின்ற போது ஹுல்லா அணியினர் தீப்பந்தங்கள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில், ஒரு யானை மிகவும் மோசமாக காயமடைந்தது. அந்த யானையை வனத்துறையினர் விடுவித்தனர். ஆனால் அந்த யானையால் சரியாக நடக்க முடியவில்லை. தீப்பந்தத்துடன் கூடிய கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் ஒரு பெண் யானையின் முதுகெழும்பில் பட்டு தீ சிக்கிக்கொண்டது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு இரவில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அந்த யானை சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனது.
வன விலங்கு ஆர்வலர் பிரேர்னா சிங் பிந்த்ரா இது தொடர்பாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நாம் யானைகளை பாதுகாப்பதாகவும், அவற்றை வணங்குவதாகவும் கூறுகிறோம். ஆனால் அவற்றிற்கு வாழ இடம் கொடுக்க மறுக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். யானைகளை விரட்ட தீப்பந்தங்கள் பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் 2018-ம் ஆண்டு தடை விதித்தது.
ஆனால் அத்தடையை பற்றி கவலைப்படாமல் வனத்துறைக்கு தெரிந்தே தீப்பந்தங்களைப் பயன்படுத்தி, ஹுல்லா அணியினர் யானைகளைத் தாக்குவதும், விரட்டுவதுமாக இருக்கின்றனர் என்று பிரேர்னா குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஒரு யானையால் நிற்கவே முடியவில்லை. அந்த யானையை புல்டோசரை பயன்படுத்தி காட்டுக்குள் தள்ளினர் என்றும் பிரேர்னா குற்றம்சாட்டினார். பிரேர்னா சிங் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கை விசாரித்துதான் சுப்ரீம் கோர்ட் யானைகளை விரட்ட தீப்பந்தங்களை பயன்படுத்த தடைவிதித்தது.