‘நோக்கம்’ பிரகடனம், இந்திய – இலங்கைக்கு இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவூட்டுவதுடன் நெருக்கமான எதிர்கால உறவுகளுக்கும் வழி வகுக்கும்.
உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை – ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் மூன்றாவது அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடனும், ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“நிலைபேறான எதிர்காலத்திற்கான வலுவூட்டப்பட்ட உலகின் தெற்கு நாடுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
உலகளாவிய தலைமைத்துவத்தில் மேற்கிற்கு இனிமேலும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில், உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
உலகின் தெற்கு நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாடு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்திய – இலங்கை உறவு குறித்து இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நோக்கு’ பிரகடனம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் நெருக்கமான உறவுகளுக்கு வழி வகுக்கும் என்றும் இது இறுதியில் பல்வேறு துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையால் இலங்கை மக்கள் இரண்டு வருடங்களாக எதிர்கொண்ட சிரமங்களைக் குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடிந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக நன்றிகளைத் கூறினார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ தொடர்பான மூன்றாவது இணையவழி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளமைக்கு நன்றி. இந்தத் தொடர் உச்சி மாநாடு எமது நோக்கங்கள் குறித்த புரிதல்கள் மற்றும் ஒவ்வொருக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் உலகின் தெற்கு நாடுகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் பொதுவான நிலைப்பாட்டை எட்ட உதவும். மேற்குலகம் தொடர்ந்தும் உலகத் தலைமைத்துவத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளது. இப்போது பிரச்சினைக்குரிய பகுதியாகவும் மேற்குலகம் மாறியுள்ளது. . உக்ரெய்னும் காசாவும் அதற்கு முக்கியமான உதாரணமாகும்.
இந்தச் சூழலில், உலகளாவிய தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளை நாம் பாராட்ட வேண்டும்.
இலங்கை தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை குறிப்பிடுகிறேன். உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகள், சீனா எக்ஸிம் வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இரண்டு வருடங்களாக இலங்கை மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையே காரணம் என்பதை இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.
நமது இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட ‘நோக்கம்’ என்ற அறிக்கையானது, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நமது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை நினைவுபடுத்தும் அதேவேளையில், எதிர்காலத்திலும் நெருங்கிய உறவுகளை பேணுவதற்கான வழியைத் திறந்துள்ளது. இதனால் பல துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பிணைப்பு ஏற்படும்.
தற்போது விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம். மின்சாரம், போக்குவரத்து மற்றும் தரை மார்க்க இணைப்புகள் ஆரம்பிக்கப்படும். மேலும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய இணக்கம் காணப்பட்ட திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த திட்டங்கள் எமது அறிவையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதற்கும் இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்கும் உதவும். அதற்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது அபிவிருத்தியின் மையமாக மாறி வருகிறோம். எனவே, பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
BIMSTEC சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை, இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடன், ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு வரையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், பிராந்தியத்தின் விரிவான பொருளாதார கூட்டினைவான (RCEP) உறுப்புரிமையை இலங்கையை பெற்றுக்கொள்ளவும் இலங்கை முன்வந்திருக்கிறது. வங்காள விரிகுடா பகுதி நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி, நாகரீகங்களின் மோதல், வரலாற்றின் முடிவுகள் போன்ற கருத்துக்களால் உருவான மேற்கத்திய மேலாதிக்கத்தின் 1989இற்குப் பிந்தைய சகாப்தம் இப்போது முடிவுக்கு வருகிறது.
இந்த உச்சிமாநாடு மற்றும் இதற்கு நிகரான BRICS மற்றும் G20 குழுவின் விரிவாக்கம் என்பன உலகளாவிய தெற்கில் ஒரு பாரம்பரியத்தை விட்டுச்செல்லகக்கூடிய புதிய ஒழுங்குக்கு வழி வகுக்கும். சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆபிரிக்க – ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்துவரும் நம் அனைவருக்கும் இடையே நெருக்கமான ஒற்றுமையை கொண்டு வருவதற்காக ஆற்றி வரும் பணிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.