மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்: `டீ தண்ணி குடிக்க 1 கி.மீ போக வேண்டியிருக்கு'- உணவகம் இயக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், புது நத்தம் சாலையில் அமைந்துள்ளது, கலைஞர் நூற்றாண்டு நூலகம். வாசகர்கள் படிப்பதற்காகக் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதலமைச்சரால் நிறுவப்பட்டது. அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது இந்நூலகம். 2.7 ஏக்கர் பரப்பளவில் 3.62 லட்சம் நூல்கள், ஆறு தளங்களைக் கொண்டு மிகவும் பிரமாண்டமாக வாசகர்களுக்கு ஏற்ப அனைத்து விதமான வசதிகளும் இந்நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்

குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனித்தனியே பிரிவுகள் வைக்கப்பட்டு, அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நூல்கள் போக, வேறு சில புதிய நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பயிற்சிக் கூடங்கள், சிறப்பு உரைகள், திரையிடல், அறிவியல் ஆய்வுகள் என பல்வேறு விதமான நிகழ்வுகள் இந்நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரையில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்றாக தற்போது கருதப்படுகின்ற இந்நூலகத்திற்கு நாள்தோறும் 2,000 வாசகர்கள் வருகின்றனர். முக்கியமாக, விடுமுறை நாள்களில் 3,000-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர். மேலும் 120-க்கும் மேல் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், நூலகத்திற்கு அருகே திறக்கப்பட்ட உணவகம் ஓராண்டைக் கடந்தும், இன்னும் இயக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் வாசகர்கள், பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வருபவர்கள் எனப் பலரும், உணவகம் மூடியிருப்பதைப் பார்த்துவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும், டீ குடிக்க, உணவு சாப்பிட என, ஒரு கிலோமீட்டர் தள்ளிச் செல்ல வேண்டிய சூழல் நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இயங்காமல் இருக்கும் அந்த உணவகத்திற்கு உள்ளேயும்  மாணவர்கள் அமர்ந்து படிக்கின்றனர். தினசரி வந்து செல்லும் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் உணவிற்காக வெளியே சென்றுவிட்டு, மீண்டும் நூலகத்துக்குத் திரும்பிவந்து படிக்க வேண்டியிருக்கிறது. இதனால் பொதுமக்களும் பணியாளர்களும் விரைவில் உணவகம் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து தலைமை நூலகர் வி.தினேஷ்குமாரிடம் பேசினோம். “அனைத்து விதமான வசதிகளும் இங்கு உள்ளது. கூடுதலாகச் சிறப்பு நிகழ்வுகளும் தற்போது நடக்கிறது. மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற இந்நூலகத்தில் உணவகம் மட்டும்தான் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. அது சம்பந்தமான அரசு அறிக்கைக்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் உணவகம் இயங்கும் என எதிர்பார்க்கிறேன். மக்களுக்குத் தேவையானவற்றை இந்நூலகம் வெகு சீக்கிரமாகப் பூர்த்தி செய்யும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.