பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி, தங்கம் வென்று சாதித்தார். அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இருப்பினும் நண்பர்களான அர்ஷத் நதீம் – நீரஜ் சோப்ரா இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வெற்றியைக் கொண்டாடியது நெகிச்சியான தருணமாக அமைந்தது. மேலும், நீரஜ் சோப்ராவின் தாயார், ‘தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும் என்னுடைய மகன்தான்’ என மகிழ்ச்சியுடன் பேசியதும், அர்ஷத் நதீமின் தாயாரும் அதே அன்பை நீரஜ் சோப்ராவின் மீது பொழிந்ததும் பில்லியன் கணக்கான இதயங்களை வென்றது.
2015-ம் ஆண்டு முதல் ஈட்டி எறிதலில் பங்கேற்று வருகிறார் அர்ஷத் நதீம். கானேவால் என்கிற கிராமம்தான் அவரின் சொந்த ஊர். எறிவதற்கு ஈட்டியே இல்லாத, ஆடுவதற்கு மைதானமே இல்லாத ஒரு சூழலிலிருந்துதான் அவர் வந்திருக்கிறார். அர்ஷத்தின் தந்தை ஒரு கட்டடத் தொழிலாளி. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட அர்ஷத்துக்கு ஊர் மக்கள்தான் கூட்டாகப் பணம் சேர்த்து வழங்கி அவரை வெளியூர் போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம், தனது ஊருக்கு நல்ல சாலைகள், அடிப்படை வசதிகள், பல்கலைக்கழகம் கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
அர்ஷத் நதீமின் இந்த பேச்சைக் கேட்ட அனைவரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளையும், அன்பையும் பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பின் அர்ஷத் நதீமின் பயோபிக் குறித்து அர்ஷத் நதீம் – நீரஜ் சோப்ரா இருவரும் பேசிய காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பத்திரிகையாளர், ‘அர்ஷத் நதீமின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதில் யார் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கேள்வி கேட்க, அதற்கு நீரஜ் சோப்ரா, ‘பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும். அவர்தான் நல்ல உயரமும், ஈட்டி எறிதல் வீரருக்கு ஏற்ற உடல் வாகும் கொண்டவர்” என்று பதிலளித்திருக்கிறார். ஒருவரை ஒருவர் பாராட்டி பேசும் அர்ஷத் நதீம் – நீரஜ் சோப்ரா இருவரின் இந்த நட்பையும், அன்பையும் நெட்டிசன்கள் பாராட்டிப் பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.