உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் ISBT பேருந்து நிலையத்தில், ஆகஸ்ட் 13 அன்று, பஞ்சாப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை, மயக்கமடைந்த நிலையில் குழந்தைகள் நலக் குழுக் குழுவினர் மீட்டனர். அதிர்ச்சியில் உறைந்திருந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின்போது எதுவும் பேசாத சிறுமி, டேராடூனுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்கும், பின்னர் மொராதாபாத்துக்கும் பயணம் செய்திருக்கிறார். என்ன காரணத்துக்காக பயணம் செய்தார் என்பது தெரியாத நிலையில், நீண்ட கவுன்சலிங் கொடுத்ததற்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுமியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, நேற்று ஐஎஸ்பிடி காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி குசும் காண்ட்வால், இன்று காலை பாலிகா நிகேதனுக்குச் சென்று பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை நேரில் சந்தித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எஸ்எஸ்பி மற்றும் மாவட்ட நன்னடத்தை அதிகாரியிடம் விரிவான தகவல்களைக் கேட்டிருக்கிறோம். இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அடையாளம் தெரியாத குற்றவாளிகள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காவல்துறை அதிகாரி பேசுகையில், “இந்த வழக்கு தொடர்பாக, ஐந்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விசாரணைக்காக ஐஎஸ்பிடி-யில் இருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதாரங்களை சேகரிக்க ஐஎஸ்பிடி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம் தொடங்கி மேற்கு வங்கத்தில் மருத்துவத்துறையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.