கடந்த 16-ம் தேதி டெல்லியின் நஜாப்கர் நகர் காவல்துறைக்கு மதியம் 1 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு பெண், “சார் எங்க அம்மா கதவை திறக்கமாட்ராங்க… பயமா இருக்கு… உதவி செய்யுங்க” எனப் பேசினார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நான்காவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டை அடைந்தனர். அங்கு உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டுக் கதவை தட்டிப் பார்த்தும் யாரும் திறக்காததால், காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்றது. வீட்டினுல் 58 வயதான சுமித்ரா என்றப் பெண் இறந்து கிடந்தார். அவரின் நெற்றி, கண், இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் காயம் ஏற்பட்டு, வாயில் ரத்தம் வடிந்திருந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, காவல் நிலையத்துக்கு போன் செய்த பெண்ணிடம் விசாரணையை தொடங்கியது. தன்னை மோனிகா சோலங்கி என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், “15-ம் தேதி அம்மாவை பார்க்க வந்தேன். அப்போ அம்மா நல்லாதான் இருந்தாங்க. இது எப்படி நடந்துச்சுனு தெரியலயே..” என அழுதார்.
அதைத் தொடர்ந்து, காவல்துறை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், 16-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுமித்ரா வசிக்கும் வீட்டுக்குள் நுழைவதை காவல்துறை கண்டுபிடித்தது.
அந்த வீடியோவை மேலும் ஆய்வு செய்ததில், அந்த மூவரில் ஒருவர், இறந்தவரின் மகளான மோனிகா சோலங்கி என்பதும் தெரியவந்தது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறை மோனிகா சோலங்கியை கைது செய்து விசாரித்ததில், இந்த வழக்கின் திருப்பு முனையாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
மோனிகா சோலங்கி அளித்த வாக்குமூலத்தில், “சொத்து தகராறு காரணமாக என் அம்மாவை, என்னுடைய வருங்கால கணவர் நவீன் குமார் (28), நவீன் குமாரின் நண்பர் யோகேஷ் (26) உடன் சேர்ந்து கொலை செய்தேன். இந்த வழக்கை திசை திருப்பவே, காவல்துறைக்கு போன் செய்து பேசி நாடகமாடினோம்” என ஒப்புக்கொண்டார்.
தலைமறைவாக இருந்த நவீன் குமாரையும், யோகேஷையும் காவல்துறை தற்போது கைது செய்திருக்கிறது. மேலும், மூவர் மீதும், பிஎன்எஸ் பிரிவு 103 (1)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.