ஐபோன்கள் தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்… 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஐபோன் வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. தற்போது இஎம்ஐ போன்ற வசதிகள் வந்து விட்டதால், பிரீமியம் போன்க என்பது பலருக்கு கைக்கு எட்டும் கனவாக ஆகி விட்டது என்றால் மிகை இல்லை. மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கொண்ட ஐபோன் மிகவும் சிறப்பு வாய்ந்த பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தவிர, அதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது. இந்நிலையில், நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஐபோனை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளாக ஐபோன் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு சொந்தமான, டாடா எலக்ட்ரானிக்ஸ் நவம்பர் மாதம் முதல் ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது நான்காவது ஐபோன் அசெம்பிளி யூனிட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் திறக்க தயாராகி வருகிறது என கூறப்படுகிறது. 

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே தமிழ்நாட்டின் ஓசூரில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. இப்போது மேலும், 250 ஏக்கரில் ஐபோன்கள் தயாரிக்க மற்றொரு தொழிற்சாலை அமைக்கப்படும். இந்த தொழிற்சாலையில் நிறுவனம் 6000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதனால் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. முன்னதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஐபோன் தயாரித்து வந்தது. இதையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது டாடா குழுமமும் இந்த பணியில் இறங்கியுள்ளது. இப்போது டாடாவின் இந்த புதிய தொழிற்சாலை ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிக தொலைபேசிகளை தயாரிக்க உதவும். இது இந்தியாவிலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆப்பிள் நிறுவனம் இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அதன் பாகங்கள் மற்றும் போன்களை தயாரிக்க தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு, விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் வாங்கிய நிலையில், இப்போது இந்த புதிய தொழிற்சாலையுடன் ஐபோன்கள் தயாரிக்கப்படும் இரண்டாவது தொழிற்சாலை இதுவாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.