தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் இதற்கு காரணமான கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனையை கட்டுப்படுத்தக் கோரி பாப்பா நாட்டில் ( இன்று )திங்கள்கிழமை கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு பகுதியில் கடந்த 12-ம் தேதி, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவிதாசன், பிரவீன், திவாகர் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
ஒரத்தநாடு பகுதியில் கஞ்சா விற்பனையும் கள்ளச் சந்தையில் மது விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாள்தோறும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பாப்பாநாட்டில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர்கள், கிராம மக்கள், பெண்கள், அனைத்துக் கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.