புலந்த்ஷாஹர்: பிரிட்டானியா நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் 10 பேர் ரக்ஷபந்தன் எனப்படும் ராக்கி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 27 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து புலந்த்ஷாஹர் எஎஸ்எஸ்பி ஷ்லோக் குமார் கூறியதாவது:
காசியாபாத்தில் இருந்து சம்பல் நோக்கி சென்ற வேனில் பிரிட்டானியா நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் ராக்கி பண்டிகையை கொண்டாட அலிகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு புறப்பட்டுள்ளனர். அந்த வேன் புடான்-மீரட் மாநிலநெடுஞ்சாலையில் நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது புலந்த்ஷாஹரின் சேலம்பூர் பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் அந்த வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதில், 10 தொழிலாளர்கள்பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 27 பேர்மீட்கப்பட்டு புலந்த்ஷாஹர், மீரட்மற்றும் அலிகார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்தவர்களில் அடங்குவர். இவ்வாறு ஷ்லோக் குமார் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்து சம்பவத்தை அறிந்தவுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான உயரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.