தமிழக தலைமைச் செயலராக முருகானந்தம் பொறுப்பேற்றார்: முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலராக, முதல்வரின் செயலர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் கடந்த 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், 48-வது தலைமைச் செயலராக இறையன்புவை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, நகராட்சி நிர்வாகத் துறை செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா 49-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

சிவ்தாஸ் மீனா வரும் அக்டோபரில் ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர் பதவிக்கு, முதல்வரின் செயலர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், ‘கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலர்-1 நிலையில் இருந்த நா.முருகானந்தம், தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று தலைமைச் செயலகம் வந்த நா.முருகானந்தம், தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடமும், முந்தைய தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவிடமும் வாழ்த்து பெற்றார்.

தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள நா.முருகானந்தம், சென்னையில் கடந்த 1967 டிசம்பர் 23-ம் தேதி பிறந்தவர். 1991-ல் நேரடி ஐஏஎஸ் அதிகாரியானார். கணினி அறிவியலில் இளநிலை பொறியியல் பட்டம், அகமதாபாத் ஐஐஎம்மில் எம்பிஏ முடித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை இணை செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையராகவும், கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் துறை செயலராகவும், திமுக ஆட்சியின் தொடக்கத்தில் நிதித் துறை செயலராகவும் பணியாற்றினார்.

கடந்த 2020-ல் கரோனா பரவலின்போது, இவரது களப்பணி பெரிதும் பாராட்டப்பட்டது. முருகானந்தத்தின் மனைவி சுப்ரியா சாஹு, சுகாதாரத் துறை செயலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமைச் செயலர் முருகானந்தம் நேற்று பிறப்பித்த முதல் உத்தரவில், ‘தூத்துக்குடி ஆட்சியர் ஜி.லட்சுமிபதி, முதல்வரின் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக, பொது நூலகத் துறை இயக்குநரான கே.இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.