புதுடெல்லி: பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் சந்தீப் கோஷ் மீதான சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், அவரிடம் தொடர்ந்து 4-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல்வேறு கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி அவரின் உடல் மீட்கப்பட்டது. அப்போது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தது. கண்துடைப்பு நடவடிக்கையாக சந்தீப் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்க அரசு அவரை மீண்டும் பதவியில் நியமித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து சந்தீப் கோஷை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் அவரை இயக்குநராக நியமிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. இதன்பிறகு தலைமறைவாக இருந்த சந்தீபை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 3-வது நாளாக நேற்றும் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை சிபிஐ அலுவலகத்தில் 4-வது நாளாக சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவரின் மரணம் பற்றிய செய்தி கிடைத்ததும், நீங்கள் யாரைத் தொடர்பு கொண்டீர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை ஏன் மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள், இச்சம்பவத்துக்குப் பிறகு செமினார் ஹாலுக்கு அருகே உள்ள அறைகளை சீரமைக்க உத்தரவிட்டது யார் என அவரிடம் கேள்விகள் எழுப்பி, விசாரணையும் நடத்தப்பட்டது. அவரது செல்போன் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர் செல்போனில் யாரிடம் பேசினார், என்ன பேசினார் என்பன குறித்த விவரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.
இதனிடையே, “மம்தா பானர்ஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்கை மறைக்க விரும்புகிறார். மருத்துவ மாணவி வழக்கில் மம்தா பானர்ஜி அரசின் நம்பகத்தன்மை பூஜ்ஜியமாக உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
மம்தாவுக்கு எதிராக பதிவிட்ட மாணவி கைது: முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாகவும், கொல்கத்தா மருத்துவனையில் பாலியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறி கீர்த்தி சர்மா ஏன்ற கல்லூரி மாணவியை கொல்கத்தா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட மாணவி தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் படம் மற்றும் அடையாளத்தையும் இணைத்திருந்தார். இது தண்டனைக்குரிய குற்றம். மேலும், தனது இரண்டு சமூக வலைதள பகிர்வுகளில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கொண்டும், நேரடியாக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகவும் இருந்தது.
இந்தப் பதிவுகள் ஆத்திரமூட்டம் இயல்பிலும், சமூகத்தில் அமைதியின்மை, குழுக்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் தன்மை கொண்டது. இதனால் கொல்கத்தா காவல் நிலையத்தில் மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர்.