“முதல்வர் மம்தாவை விமர்சிப்பவர்களின் விரல்கள் உடைக்கப்படும்” – மே.வங்க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணாமூல் அமைச்சர் பேசிய காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஆக. 18) நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா கூறியதாவது: கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும். இல்லையெனில் இது போன்ற நபர்கள் மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றிடுவிடுவார்கள்.

மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் நடந்தபிறகு கூட, போலீஸார் யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை அரசு இங்கே ஒருபோதும் அனுமதிக்காது. மாநில மக்களின் உதவியுடன் அந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம். இவ்வாறு குஹா கூறினார்.

அவரது பேச்சு அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் ‘தலிபான்’ மனநிலையை இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளது.

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.