வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!

Mohammed Shami: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இந்திய அணி வீரர்கள் ஓய்வில் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இலங்கையும் வென்று இருந்தது. இந்த சுற்றுப்பயணம் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் துவங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரின் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் வீரர்கள் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இது அவர்களுக்கு நல்ல பயிற்சியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துலீப் டிராபி தொடரில் ஷுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் போன்ற பல இந்திய வீரர்கள் விளையாடுவார்கள். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கதேச தொடரில் இடம் பெற உள்ளார் என்று கூறப்பட்டது. இதனால் ஷமியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். ஆனால், இன்னும் காயம் முழுவதும் சரியாகாததால் வங்கதேச தொடரில் முகமது ஷமி இடம் பெற மாட்டார் என்றும், அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடள் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷமி கடைசியாக நவம்பர் 19, 2023ம் தேதி நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பிறகு கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷமி தற்போது வரை ஓய்வில் உள்ளார். 2024 ஐபிஎல் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, முகமது ஷமி இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பு 2024 ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் ஷமி இடம் பெற மாட்டார் என்று கூறப்படும் அதே வேளையில், துலீப் டிராபி அணியிலும் அவர் இடம் பெறவில்லை. இன்னும் ஷமியின் காயம் சரியாக நேரம் தேவை என்பதால் துலீப் டிராபியில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அவரை கட்டாயப்படுத்தி விளையாட வைத்து காயம் இன்னும் அதிகமாக தேர்வாளர்கள் விரும்பவில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், பெங்களூருவில் அக்டோபர் 19-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24ம் தேதியும், 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நவம்பர் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. இவற்றை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஷமி முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.