Doctor Vikatan: லேசான தூறல், மிதமான குளிர் என எதுவுமே எனக்கு ஏற்றுக்கொள்வதில்லை. உடனே தலை பாரமாவது, சளி பிடித்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் வருகின்றன. நிலவேம்பு கஷாயம் வைத்துக் குடித்தாலும் வயிற்றுப் பிரச்னை வருகிறது. தலை பாரத்துக்கும் ஜலதோஷத்துக்கும் மாத்திரைகள் அல்லாத வேறு தீர்வுகள் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
நிலவேம்பு கஷாயம் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அது வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு ஒரு எளிய மருத்துவம் சொல்கிறேன். 10 வேப்பிலை, அரை டீஸ்பூன் சீரகம், அதிகபட்சம் 5 மிளகு, அரை டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைக்கவும். இதில் பெரியவர்கள் என்றால் 30-50 மில்லி, 12 வயதுக்குட்பட்டவர்கள் 20 மில்லி எடுத்துக்கொள்ளலாம். இது சளி, இருமல் பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரும்.
மழை, குளிர்கால பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். துளசியும் ஏலக்காயும் சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை அருந்துவது, கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம்.
தண்ணீரில் ஆடாதொடா இலை, நொச்சி இலை தலா ஐந்து, நான்கைந்து மிளகு சேர்த்து நன்கு கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலியில் சிறிது எடுத்து நன்கு இடித்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, தேநீர் போல இனிப்பு சேர்த்தோ, இனிப்பு சேர்க்காமல் கஷாயமாகவோ குடிக்கலாம்.
சித்தரத்தையும் அதிமதுரமும் தொண்டைவலிக்கும், தொண்டைக் கரகரப்புக்கும் அற்புதமான மருந்துகள். இவற்றையும் தட்டிப்போட்டு தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.
மழை மற்றும் பனிக்காலத்தில் கூடியவரை வெதுவெதுப்பான நீரையே நாள் முழுவதும் குடிப்பது நல்லது. மிளகு, சீரகம் இரண்டையும் சுத்தமான துணியில் கட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அந்த நீரை வெதுவெதுப்பாக அவ்வப்போது குடிக்கலாம். எப்போதும் ஃப்ரெஷ்ஷான, சூடான உணவுகளைச் சாப்பிடுவது, குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது போன்றவையும் முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.