2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்குச் சிறந்த நடன இயக்கத்திற்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நித்யா மேனனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. ஆனால், சிலர் ‘இது வழக்கமான கதாபாத்திரம்தானே? சாதாரணமாக நடித்ததெற்கெல்லம் விருதா?’ என்று நித்யா மேனன் விருது வென்றது குறித்து விமர்சனங்களையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை நித்யா மேனன், “’திருச்சிற்றம்பலம்’ படத்தில் எனது நடிப்பு சாதாரணமாகத் தெரியும். ஆனால் அதன் பின்னுள்ள உழைப்பைப் புரிந்துகொண்ட தேர்வுக்குழுவுக்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ அல்லது செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான். அதுவே முழுமை கிடையாது.
இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த விருது எனக்கு, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், மற்றும் தனுஷ் ஆகிய நால்வருக்குமானது. ஏனென்றால் எந்தப் படத்திலும் நடிகருக்கு இணையான வேடத்தில் நான் இதுவரை நடித்ததில்லை” என்று கூறியிருக்கிறார்.