வரும் செப்டம்பர் மாதம் விஜய்யின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான மாதம் போலிருக்கிறது. செப்டம்பர் 5-ம் தேதி விஜய்யின் `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைக்கு வருகிறது. இன்னொரு பக்கம் அதே மாத கடைசி வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட மாநாடும் நடைபெறும் என்கிறார்கள். இந்த மகிழ்வுகளைத் தொடர்ந்து `விஜய் 69′ படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகின்றன. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி…
விஜய் இப்போது நடித்து முடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து சில வாரங்கள் அரசியல் வேலைகளில் முழுக்கவனம் செலுத்தவுள்ளார். அதன் பிறகே அவரது அடுத்த படம் குறித்த வேலைகளில் இறங்குவார்.
முதலில் கட்சியின் மாநாட்டை நடத்தவுள்ளார். இது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு என்பதால், பல லட்சம் பேர் திரளும் வசதிகொண்ட மைதானங்கள் கொண்ட ஊர்களை அவரது கட்சியினர் அலசி, ஆராய்ந்து இடங்களைத் தேடி வருகின்றனர். அதில் ஒரு இடம் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
அதே சமயத்தில் இம்மாதம் 22-ம் தேதி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்துகிறார் விஜய். ஏற்கெனவே வெள்ளை, நீலம் கொண்ட மக்கள் இயக்கக் கொடி இருக்கின்றது. கட்சிக்கென தனிக்கொடி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் வருகிற 22-ம் தேதி (ஆகஸ்ட் மாதம்) கட்சிக் கொடியை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
தவிர மாநாட்டிற்கு திருச்சி, மதுரை, விக்கிரவாண்டி உட்பட மொத்தம் நான்கு இடங்கள் பரிசீலனையில் இருந்துவருகின்றன. மாநாட்டுக்கான திட்டமிடல்கள் ஜரூராகவும் நடந்து வருகின்றன.
இதற்கிடையே மாநாட்டை செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து 30-ம் தேதிக்குள் எதாவது ஒரு தேதியில் நடத்தலாம் என்றும் தகவல் பரவி வருகிறது. மாநாட்டை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர். அதனைத் தொடர்ந்து ‘தளபதி 69’ படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவது இயக்குநர் அ.வினோத்தான் என்பதைச் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் அவரே அறிவித்திருந்தார். “இந்தப் படம் 200 சதவிகிதம் விஜய் படமாக கமர்ஷியலாக, ஜனரஞ்சகமான ஒன்றாக இருக்கும்” என வினோத்தே அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சமந்தா நடிப்பார் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே சமயம், மமிதா பைஜூ நடிப்பது உறுதிதான் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தை விஜய்யின் ‘லியோ’ படத்தின் இணைத் தயாரிப்பாளரான ஜெகதீஷ் தயாரிக்கலாம் என்ற பேச்சும் இருக்கின்றது.