சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று (ஆக.20) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் தழுதலையில் 10 செமீ, தேனி மாவட்டம் மஞ்சளாறு, ஆண்டிபட்டியில் தலா 8 செமீ, திருச்சி மாவட்டம் முசிறி, சேலம் மாவட்டம் தலைவாசலில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.