வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, பதில் அளித்துள்ள எலான் மஸ்க் ‘சேவை செய்ய தயாராக இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களமிறங்கி உள்ளார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக உள்ளது. இருவரும் சம பலத்துடன் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில், டொனால்டு ட்ரம்ப்புக்கு உலகின் பெரும் பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அரசின் ஆலோசகராக எலான் மஸ்க்கை நியமிப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான எக்ஸ்-ல் பதில் அளித்துள்ளார். அதில், “சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவின் கீழ், “அரசாங்கத் திறன் துறை (DOGE)” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேடையின் முன் எலான் மஸ்க் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
டெஸ்லா மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவில், மின்சார வாகனம் (EV) வாங்குவதற்கு $7,500 வரிக் கடன் வழங்கப்படுகிறது. இதனால், வரி செலுத்துவோரின் வரிக்குரிய வருமானத்தின் அளவு குறைகிறது. இந்தத் திட்டம் டெஸ்லா நிறுவனத்துக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். தான் அதிபரானால், இந்த திட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறி இருந்தார். அதேநேரத்தில், எலான் மஸ்க் மிகவும் புத்திசாலி என்றும் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.