போடி: தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து பெய்து வரும் கனமழையினால் வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் இருந்தது. அதன் பின்பு சில வாரங்களாகவே அடுத்தடுத்து கனமழை பெய்து வருகிறது. கனமழைக்குப் பின் சில நாட்கள் மழை நிற்பதும், பின்பு மீண்டும் சில நாட்களுக்குப்பின் மழை தொடர்வதுமாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் தற்போது இதமான குளிர் பருவமழை நீடித்து வருகிறது. நேற்று ஆண்டிபட்டியில் அதிகட்சமாக 79.5 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரி மழையளவாக 148 மி/மீ. மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்) மதியம் மீண்டும் மழை தொடங்கியது. இதில் சோத்துப்பாறையில் 40 மி.மீ. வருசநாடு பகுதியில் 60 மி.மீ மழை பெய்துள்ளது.
அடுத்தடுத்த மழையினால் சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து இன்றி இருந்த மூலவைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் பெய்த மழையினால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் மூலவைகையில் துணை ஆறுகளான பாம்பாறு, வராகநதி, சுருளிஆறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி 57.78 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து இன்று 64.5 அடியாக உயர்ந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.