ரஷ்ய ராணுவ முகாமில் ஏவுகணை தாக்குதலில் கேரள இளைஞர் உயிரிழப்பு

திருச்சூர்: ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சந்தீப் (36) என்பவர் ஏவுகணை தாக்குதலில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவர், கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருக்கூர் அருகே உள்ள நாயரங்காடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியனான இவர், ரஷ்யாவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சென்றார்.

இந்நிலையில் சந்தீப்பின் உறவினரான சரண் என்பவர் நேற்று கூறியதாவது: ரஷ்ய மலையாளிகள் சங்கத்தில் இருந்து 2 நாட்களுக்கு முன் எங்களுக்கு தகவல் வந்தது. ரஷ்ய ராணுவ கேன்டீனில் பணியாற்றி வந்த திருச்சூரை சேர்ந்த ஒருவர் ஏவுகணை தாக்குதலில் இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரை அவர்கள் அடையாளம் கண்டறிய விரும்பினர். அவர்கள் அளித்த தகவல்களை சரிபார்த்ததில் உயிரிழந்தது சந்தீப் எனத் தெரியவந்துள்ளது.

தொடக்கத்தில் மாஸ்கோவில் பணியாற்றுவதாக சந்தீப் கூறினார். ஒரு மாத சம்பள பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பினார். பிறகு அவர் மிக அரிதாகவே குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார். அவர் மாஸ்கோவுக்கு வெளியே ராணுவ கேன்டீன் ஒன்றில் பணியாற்றி வருவதாக பிறகு எங்களுக்கு தெரியவந்தது. இவ்வாறு உறவினர் சரண் கூறினார். சந்தீப்புக்கு திருமணம் ஆகவில்லை. அவரது தந்தை சந்திரன், தாயார் வல்சலா ஆகிய இருவரும் விவசாயிகளாக உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.