விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது…“சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், “திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். `நாங்கள் நட்புசக்தி` என ஒருவருக்கொருவர் பேசிவந்த நிலையில் ஏன் இந்த திடீர் மோதல் என விரிவாக விசாரித்தோம்.
சென்னை காமராஜர் அரங்கில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா அக்கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் இசையரங்கம், கவியரங்கம், வாழ்த்தரங்கம் மற்றும் பட்டிமன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தேறின. குறிப்பாக கவியரங்கத்தின்போது திருமா-வை வாழ்த்திய கவிஞர்கள் பா.ம.க, நா.த.க மற்றும் பா.ஜ.க-வை விமர்சித்தும் கவிதை வாசித்தனர். குறிப்பாக வழக்கறிஞர் சினேகா என்பவர் சீமானை தமிழகத்தின் நவீன கோமாளி எனக் குறிப்பிட்டு, “பிரபாகரனை ஆமை சமைப்பவராய் அவமதிக்கும் இவரு… தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் பிசிறு” என்றார்.
தொடர்ந்து `திராவிடத்தை அளிக்க ஆரியம் அனுப்பிய விஷ குப்பி… ” என கடுமையாக பேசியது சமூக வலைதளங்களில் அனலை கிளப்பியது. அவர் மட்டுமில்லாமல் கவிஞர் தனிக்கொடி ஜீவா, என்பவரும் திராவிட பற்றாளர் சுந்தரவள்ளி மற்றும் சில யூட்யூபர்களும் நா.த.க-வை கடுமையாக தாக்கிப் பேசினர். இதனால் சூடான நா.த.க-வினர் திருமாவளவனை நேரடியாகவும் ஒருமையிலும் விமர்சிக்க.. வி.சி.க-வினரும் பதிலடி கொடுக்க தொடங்கினர்.
நம்மிடம் பேசிய நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக் “வி.சி.க-வை ஒருபோதும் எதிரியாக நாங்கள் பார்ப்பதில்லை. தேர்தல் பிரசாரங்களில்கூட வி.சி.க-வை விமர்சிக்க வேண்டாம் என்றுதான் எங்கள் கட்சி தலைமை உத்தரவிட்டது. ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, எங்கள்மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்து, கட்சி பெயரையே வேறு விதமாக சொல்லி கலங்கப்படுத்துகிறார். திருமாவின் பிறந்தநாள் நிகழ்வில் சொல்லிவைத்ததுபோல் அனைவருமே நா.த.க-வை வசைபாடியிருக்கிறார்கள்.
இது திருமா-வின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்குமா? முதல் நபர் அவதூறாக விமர்சிக்கும்போதே அவர்கள் தடுத்திருக்கலாமே.. ஒருவேளை தி.மு.க-வை விமர்சிக்கும் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால் `இது கவிஞர்களின் உரிமை’ என சொல்லியிருப்பார்களா… தடுத்திருப்பார்களா? இதனையெல்லாம் திருமாவளவன் மேடையில் அமர்ந்து ரசிப்பதை எப்படி ஏற்க முடியும்?” எனக் கேட்டவரிடம், `திருமாவளவனை நா.த.க-வினர் அவதூறாக விமர்சித்து வருகிறார்களே?’ என்றோம் “வி.சி.க-வினர் இவ்வளவு பேசிய பிறகு எதிர்வினையாக ஆத்திரத்தில் சில பொறுப்பாளர்கள் விமர்சித்திருக்கலாம். அது தவிர்க்க முடியாததுதான்” என்றார்.
இதுகுறித்து விளக்கம்கேட்ட வி.சி.க இளைஞர் அணி மாநிலச்செயலாளர் சங்கத் தமிழனிடம் பேசினோம் “கவிரயரங்க நிகழ்வுக்கு வந்த கவிஞர்களின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் உடன்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் பேசியதெல்லாம் வி.சி.க-வின் கருத்தாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.
குறிப்பாக சீமான் குறித்து கவிஞர் சினேகா பேசியது கட்சியின் நிலைப்பாடல்ல. கடந்த காலங்களில் சீமானை கடுமையாக பேசியதற்கு `அப்படி பேச வேண்டாம்` என வலியுறுத்தினார் திருமா. எனவே தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து கொள்கை ரீதியாக பேசுவதே எங்கள் வழக்கம். ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் அடிப்படை புரிதலின்றி, முதிர்ச்சியற்று திருமா மீது நாகரீகமற்ற தாக்குதலை தொடுப்பது கண்டிக்கதக்கது” என்றார்.
அரசியல் விமர்சகர் சிலரிடம் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியை நட்புசக்தியாக பார்க்கிறோம் என திருமாவளவன் குறிப்பிட்டாலும் அதன் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களே தொடர்ச்சியாகவே நா.த.க-வை கடுமையாக விமர்சிக்கிறார். அதேபோல் `திருமாவளவனை விமர்சிக்க கட்சி தொடங்கவில்லை’ என சீமான் சொன்னாலும் திருமாவளவனை நா.த.க-வினர் எல்லைமீறி விமர்சித்திருக்கிறார்கள். மோதல் போக்கு தொடர்வதும், ஓய்வதும் அதன் தலைவர்கள் கையில்தான் உள்ளது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88