2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகத் மல்யுத்தத்தில் ஃப்ரீ-ஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.
சிறப்பாகச் செயல்பட்டு வந்த அவர் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஆனால் இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் மல்யுத்த விதிமுறையின் படி கடைசி நேரத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையைக் குறைக்கப் பல முயற்சிகள் செய்தும் அவரால் எடையைச் சரியாகக் குறைக்க முடியவில்லை. அதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
அதன் பிறகு மனமுடைந்த வினேஷ் போகத் ஓய்வையும் அறிவித்துவிட்டார். மேல்முறையீடு செய்த அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அண்மையில் வினேஷ் போகத் நாடு திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வினேஷ் போகத்தின் சொந்த கிராமத்தில் அவருக்குப் பாராட்டு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. அவருக்கு தங்க பதக்கம் முதல் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்கள் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியாகி வைரலானது.
அந்தப் பதிவில் வினேஷ் போகத்துக்கு, தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு விழாவில் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும், சர்வதேச ஜாட் சமூக மக்கள் சார்பில் 2 கோடி ரூபாய், ஹரியானா வர்த்தக அமைப்புகள் மற்றும் பஞ்சாப் ஜாட் அமைப்புகள் சார்பில் உதவித் தொகை என மொத்தம் 16 கோடியே 30 லட்ச ரூபாய் அளவில் பரிசுத் தொகை கிடைத்ததாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பதிவுக்கு வினேஷ் போகத்தின் கணவர் சோம்வீர ரதி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “வினேஷ் போகத் யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை, எந்த அமைப்பும் அவருக்குப் பண உதவியோ, பரிசுத் தொகையோ வழங்கவில்லை. தொழிலதிபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட யாரும் வினேஷ் போகத்துக்கு உதவித் தொகை எதுவும் வழங்கவில்லை. மேலும் இது தொடர்பாக தவறான தகவல்கள் எதையும் யாரும் பரப்ப வேண்டாம். இதனால் நமக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது, ஒட்டுமொத்த சமூக மதிப்புகளும் பாதிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.