Mr.Bachchan Review: 300 க்ளோஸப், 178 ஸ்லோ மோஷன்… ஏன்ட்டி சினிமா இதி ரவி தேஜா காரு?

டோலிவுட்டின் `மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது `மிஸ்டர்.பச்சன்’ என்ற திரைப்படம். இவர்கள் கூட்டணியில் இது மூன்றாவது படம். இது அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி இந்தியில் சூப்பர் ஹிட்டான `ரெய்டு’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வரி செலுத்தாமல் நிறைய கருப்பு பணம் வைத்துக் கொண்டு அரசை ஏமாற்றி கொண்டிருக்கும் நபர்களிடம் சாதுர்யமாக சோதனை நடத்தி அவர்களிடமிருந்து அவற்றை மீட்பதில் எக்ஸ்பர்டாக பெயர் பெற்றவர் வருமான வரித்துறை அதிகாரி ஆனந்த் (ரவி தேஜா). இவருக்கு பச்சன் என்ற பெயரும் உண்டு. சில காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அந்த கேப்பில் சொந்த ஊரில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து ஆர்க்கஸ்ட்ரா நடத்திக்கொண்டு, அலப்பறை கூட்டும் துறுதுறு இளைஞனாக சுற்றித் திரிகிறார். மீண்டும் ஒரு பெரிய அசைன்மென்ட் வர, சஸ்பெண்டில் இருக்கும் ரவிதேஜாவுக்கு புரொமோஷன் கொடுத்து பணியில் சேர்த்து கொள்கிறது வருமான வரித்துறை. தனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்டை எப்படி முடிக்கிறார் என்பதை ‘பக்கா டெம்ப்ளேட்’ காட்சிகளைக் கொண்டு சுழற்றி சுழற்றி அடித்து துவைத்துச் சொல்வதே ‘மிஸ்டர்.பச்சன்’. 

மிஸ்டர் பச்சன்

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற்போல படம் முழுக்க ரவி தேஜாவே! ஆக்‌ஷன், டான்ஸ், பன்ச் என முழுக்க முழுக்க அவருக்காகவே படம். ஆனால், அதுதான் பெரிய மைனஸும்! அவருக்கே உரிய மேனரிஸம், உடல்மொழி, டயலாக் டெலிவரி எனப் படம் நெடுக அது மட்டுமே இருக்கிறது. ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் அளவுக்கு அதிகமாக இருப்பதால் சில நேரத்திலேயே அது அயர்ச்சியை கொடுக்கத் தொடங்குகிறது.

இன்ட்ரோ சீனில் தன்னுடைய செட்டாக் வண்டியை ஏரில் பறக்கவிட்டு அம்பாஸடர் காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு சொருகி, ஏரில் பறந்து வந்து தரை இறங்குகிறார், ரவி தேஜா. இந்த ஒரு சீன் போதும், படம் முழுக்க எப்படியான காட்சிகள் இவருக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள! அவர் மூக்கைச் சொறிந்தால் கூட ஸ்லோமோஷனில் காட்டுகிறார்கள். ‘வழி நெடுக காட்டுமல்லி’ என்பது போல, படம் நெடுக ரவிதேஜாவுக்கு மட்டும் 178 ஸ்லோமோஷன் ஷாட்டுகள் இருக்கின்றன. 

மிஸ்டர் பச்சன்

அவரின் காதலி ‘ஜிக்கி’யாக பாக்யஶ்ரீ போர்ஸே. டெம்ப்ளேட் தெலுங்கு சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோயின். ஸ்லோமோஷன் இன்ட்ரோ, ஹீரோ துரத்தி துரத்தி காதலிக்கும்படி மூன்று சீன்கள், இம்ப்ரஸாகி காதலில் விழும் இரண்டு சீன்கள், ரொமான்ஸுக்காக மூன்று சீன்கள், எமோஷனலாக இரண்டு சீன்கள், நான்கு பாடல்களில் டான்ஸ் என மொத்தமாகவே பாக்யஶ்ரீ போர்ஸேவுக்குப் போரடிக்கும் காட்சிகள் மட்டுமே! அதில் அவரால் என்ன செய்யமுடியுமோ செய்திருக்கிறார், பாவம்! ஶ்ரீலீலாவுக்குப் பிறகு, டோலிவுட்டை கலக்க இருப்பது இவர்தான் என்கிறார்கள். ஆனால், இது போன்ற கதையில் நடித்தால் அதெல்லாம் கேள்விக்குறிதான். பி அலெர்ட் பாக்யஶ்ரீ!

தணிகலா பரணி, சுஹாசினி, சச்சின் கடேகர் ஆகிய அனைவரும் திரையில் இருக்கிறார்கள், கதையில் வந்து போகிறார்கள். முத்யம் ஜக்கயா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு. இது போன்ற ‘ரே…சம்பேஸ்தானுரா…’ கேரக்டரில் ஜெகபதி பாபுவே எழுபது முறை நடித்திருப்பார். சிவந்த கண்கள், கையில் சுருட்டு, பரட்டையான தலைமுடி, அதிக டெசிபலில் டயலாக் டெலிவரி என பிசிறு தட்டாத டெம்ப்ளேட் வில்லன். ஏற்கெனவே நடித்ததுதானே என அசால்டாக அந்தக் கேரக்டராக நிற்கிறார் ஜெகா. 

ஜெகபதி பாபு

`ரெய்டு’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய எடுத்துக்கொண்டு, அதை வீணடித்திருக்கிறார் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர். `மாஸ் மகாராஜா’ ரவி தேஜாவை வைத்து படம் எடுக்கிறோம் என்பதால் `மா….ஸ்’ மட்டுமா வைப்பது? அதீத மாஸ், ஸ்லோமோஷன் ஷாட்ஸ், வின்டேஜ் ரவி தேஜாவை கொண்டு வருகிறேன் என்று செய்திருக்கும் சேட்டைகள் எல்லாம் ஓவர்டோஸாகி மாஸ் பொடிமாஸானதுதான் மிச்சம். ஆ…ஊ… என்றால் ஃபைட்! படத்தில் கிட்டத்தட்ட ஏழெட்டு இடங்களில் சண்டை காட்சிகள் இருக்கின்றன. அதில் ரவி தேஜா மீது ஒரு அடி விழவில்லை. இவரிடம் அடி வாங்க அடுத்தடுத்த ஷாட்டில் ஃபைட்டர்கள் ரெடியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் ட்ரிப்யூட், நாகேஸ்வர ராவ் ரெஃபரென்ஸ் என அப்ளாஸ் வாங்க முயன்றிருக்கும் இயக்குநர், அதிலும் தோற்று போகிறார். ஹீரோவை மிஸ் செய்யும் ஹீரோயின் அவர் நினைவுகளை மீட்க தன்னுடைய தோழியை வலுக்கட்டாயமாக மொட்டைமாடி அழைத்து வந்து, அவளிடம் சிகரெட்டை கொடுத்து புகைப்பிடிக்கச் சொல்லி அந்தப் புகையை சுவாசித்து தன் காதலனை நினைத்துகொள்ளும் காட்சியெல்லாம்  டிஸ்கஷனிலேயே தூக்கியெறிந்திருக்க வேண்டியவை அல்லவா?!

‘மிஸ்டர் பச்சன்’ ரவிதேஜா

ரவி தேஜா படங்களில் காமெடி காட்சிகள் வொர்க்காகும். ஆனால், இந்த முறை அதிலும் அடி விழுந்திருக்கிறது. ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில் வரும் ‘கானா’ உலகநாதனைப் போல ஒவ்வொரு அடி அடித்த பிறகும் கையசைக்கிறார் ரவிதேஜா. ‘அடி வாங்குனது நானு… கப்பு எனக்குதான் சொந்தம்’ என்பதுபோல அவரைப் பார்க்கிறார்கள் ஃபைட்டர்கள். பாடல்களில் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர் பின்னணி இசையில் சறுக்கியிருக்கிறார். படத்தை ஒத்துக்கொண்டதுக்காக பின்னணி இசையை படம் நெடுக இரைச்சலுடன் வாசித்துள்ளார். இல்லை, இதுக்கு இது போதும் என்று நினைத்துவிட்டார் போல!

ஒளிப்பதிவாளர் அயாங்கா போஸ் ஒரு பக்கா கமர்ஷியல் படத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் போதுமான அளவு செய்திருக்கிறார். ”விக்ஸ்’ங்கிறதைதான் சுத்தி சுத்தி எழுதியிருக்கேன்’ என்று விவேக் சொல்லும் வசனம் போல சுத்தி சுத்தி இழுத்து எழுதப்பட்ட கதைக்கு எடிட்டிங் எந்த விதத்திலும் நியாயம் சேர்க்கவில்லை. அவ்வப்போது படம் எப்போது முடியும் என்று வாட்ச்சையும் போனையும் பார்க்க வைத்திருக்கின்றன திரைக்கதையும் எடிட்டிங்கும். மொத்தத்தில் ஒரு படு சுமாரான ரீமேக்காக நம்மை சுத்தலில் விடுகிறது, ‘மிஸ்டர் பச்சன்’. 

இனி விமர்சனத்தைக் கடந்து சில எக்ஸ்ட்ரா தகவல்கள்…

கடந்த சில படங்களாகவே சொதப்பும் ரவி தேஜாவுக்கு அவரது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், “உங்களின் ஆரம்ப காலப் படங்கள் எங்களை ரசிக்கவும் மெய்சிலிர்க்கவும் வைத்தன. ஆனால், நீங்கள் நடிக்கும் சமீபத்திய படங்கள் எதையும் எங்களால் ரசிக்க முடியவில்லை. இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். தயவு செய்து இந்த விமர்சனத்தை எளிதாகக் கடந்துவிடாமல், உங்கள் ரசிகர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள். நடிகர் நானி உங்களையும், சிரஞ்சீவியையும்  முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது நீங்கள் நானியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரைப் போல நீங்களும் கதைத் தேர்வில் கவனமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் உங்களை கேலி செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் மன உலைச்சலுக்கு ஆளாகிறோம். திறமையுள்ள நடிகர் நீங்கள், உங்களது திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

ரவிதேஜா – ஜெகபதி பாபு

ரவி தேஜாவின் அடுத்தடுத்த படங்கள் பிராமிஸிங்காகத் தெரிகின்றன. அடுத்து இரண்டு படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் உருவாகும் படமும் ஒன்று. ரவி தேஜா – கோபிசந்த் காம்போவில் உருவாகும் நான்காவது படம் அது. இதனைத் தொடர்ந்து, பானு பொகவரப்பு இயக்கத்தில் தன்னுடைய 75வது படத்தில் நடிக்கிறார் ரவிதேஜா. இதில் அவருக்கு ஜோடியாக ஶ்ரீலீலா நடிக்கிறார். ‘தமாகா’ படத்திற்குப் பிறகு, இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கு ‘கொஹினூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல். ‘தமாகா’ படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட், குறிப்பாக ‘பல்சர் பைக்’. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோதான் இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இயக்குநர் பாபி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தன் ரசிகர்களின் கோரிக்கையை புரிந்துகொண்டு அடுத்தடுத்த படங்களில் ரவி தேஜா ‘பழைய பன்னீர்செல்வம்’ மோடுக்கு மாறுவார் என எதிர்பார்க்கலாம். 

மீண்டு(ம்) வாருங்கள் மாஸ் மகாராஜா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.