Vaazhai: `கர்ணன்', 'மாமன்னன்' மொக்கை படமா? திருப்பி அடிச்சா அது நல்ல படம் இல்லையா? – பா.ரஞ்சித்

இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ படத்தை இயக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முக்கியமான கேரக்டர்களில் ராகுல் மற்றும் பொன்வேல் என்ற சிறுவர்கள் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், தியாகராஜன் குமாரராஜா, நெல்சன், அமீர், சூரி, கவின் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பா. ரஞ்சித்

அதில் பேசிய பா. ரஞ்சித் , ” வீட்டில நடக்குற சின்ன எமோஷனலான விஷயத்தைக்கூட நான் படத்தில் காட்சியாக கொண்டு வரும்போது அதை என்னால் எடுக்க முடியாமல் எமோஷனலாகி அழுதுவிடுவேன். ஆனால், மாரி செல்வராஜ் அவரோட முதல் படத்திலேயே ரொம்பவும் வலியான ஒரு விஷயத்தை படமாக்கி இருந்தார். இவ்வளவு வலி உள்ள ஒரு படத்தை எடுக்குறியேடா உன்னை சுத்தி உள்ளவங்க என்னடா சொல்ல போறாங்க அப்படினு நான்கூட கேட்டேன். ஆனால் அதை எடுத்து காட்டுறதுல, எடுத்து பாக்குறதுல, மக்களுக்கு அதை கொண்டு போய் சேக்குறதுல மிகப்பெரிய வேட்கை இருக்கு அந்த வேட்கையின் தொடர்ச்சியாகதான் அவருடைய படங்களைப் பார்க்கிறேன்.

மாரி செல்வராஜ் பலமே கதை சொல்லல்தான் என்பது என்னுடைய கருத்து. மிகவும் எளிமையாக கதையை சொல்லக் கூடியவர். அவருடைய கதையை மிகவும் நிதானமாக சொல்லி அதை ஜனரஞ்சகமான ஒரு படமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து மக்கள் மத்தியில் அதை பேசுபொருளாக மாற்றும் வல்லமை கொண்டதுதான் மாரி செல்வராஜின் மொழி. அதை நான் மிகவும் பிரமிப்பாக பார்க்கிறேன். பல சாய்ஸ் இருந்தாலும் இந்தப் படத்தை இந்த மொழியில் இப்படித்தான்சொல்ல வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் அதை மக்களுக்குக் கொண்டு செல்கிறார்.

பா. ரஞ்சித்

அவனோட மொழியை அவன் படைக்கும் போது அதை விமர்சனம் செய்கிறார்கள் ‘பரியேறும் பெருமாள்’ நல்ல படம்னா ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என்ன மொக்கை படமா? திருப்பி அடிச்சா அது நல்ல படம் இல்லையா? ‘பரியேறும் பெருமாள்’ அனைவருக்கும் பிடித்தது. ஏனென்றால் அந்தப் படத்தின் கதாநாயகன் திருப்பி அடிக்கவில்லை. ஆனால் மாமன்னன் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் கதாநாயகன்கள் திருப்பி அடிப்பதால் அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. தற்போது அவருடைய வாழ்க்கையைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேச ‘வாழை’ படம் மூலம் முன்வந்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிரால் பண்றாங்க. சின்ன வயசுல இருந்தே பிரச்னைகளைப் பார்த்து பார்த்து வளர்ந்து வந்திருக்கோம். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.