இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் `வாழை’ திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
மாரி செல்வராஜின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios’-யின் முதல் திரைப்படம் இது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமத்தை ‘Disney+ Hotstar’ வாங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று ‘வாழை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், அமீர், வெற்றிமாறன், நெல்சன், மிஷ்கின், மடோன் அஸ்வின், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியிருந்தனர்.
இதில் பேசிய இயக்குநர் ராம், “இந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதம். ‘ஜமா’, ‘தங்கலான்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் என்னோட மாரி செல்வராஜோட ‘வாழை’ என இந்த மாதம் வெளியாகியிருக்கும் நான்கு திரைப்படங்ளும் தமிழ் சினிமாவின் மைல் கற்கள். என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்து, உதவி இயக்குநராக மாறி, ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் நடிகராகவும் மாரி செல்வராஜ் என்னுடனே பயணிக்கத் தொடங்கினான். ‘கற்றது தமிழ்’ ஒரு ஆற்றைப் போல வந்து என்னிடம் இருந்த எல்லாவற்றையும் அடித்துச் சென்றது. என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் என்னைவிட்டுச் சென்றார்கள். அதில் மிஞ்சியிருந்தவன் மாரி. இன்றும் எனக்காக மீண்டும் உதவி இயக்குநராக வந்து பணியாற்றச் சொன்னால் பணியாற்றுவான்.
2007 ம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்திற்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம். அப்போது ‘Blogspot’ தளத்தில் ‘காட்சி’ என்ற பெயரில் ஒரு இணையதள பக்கத்தை ஆரம்பித்தோம். நானும், மாரியும் இன்னும் பலர் சேர்ந்து எழுதினோம். அதில் மாரி எழுதிய கதையை வாசித்து, மாரியைத் தொடர்பு கொண்டு பேசி திவ்யாவும், மாரியும் காதலர்கள் ஆனர்கள். எழுத்தாளர், இயக்குநர் இதைத்தாண்டிதான் கணவர் என்று திவ்யா மாரியை நேசிக்கிறார். திவ்யா இல்லையென்றால் மாரி இல்லை.
மாரியின் அண்ணன்தான் ‘ஆனந்த விகடன்’ இதழை மாரிக்கு அறிமுகப்படுத்தினார். பின்னாளில் மாரியே அந்த ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர் எழுதும் அளவிற்கு வளர்ந்தான். அரசுப் பள்ளிதான் மாரியை வளர்த்திருக்கிறது. அன்று ஆசிரியை மாரியின்மீது புகாரளித்திருந்தால் இன்று மாரி வேறுமாதிரி இருந்திருப்பான். அந்த ஆசிரியை மாரி மீது அவ்வளவு அன்பைக் காட்டியிருக்கிறார். எல்லா அரசுப் பள்ளியிலும் இப்படி ஒரு ஆசிரியர், ஆசிரியை மாணவர்கள் மீது அதீத அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும், அரசுப் பள்ளியில்தான் கலை வளர்க்கப்படுகிறது. அரசுப் பள்ளி அன்புடன் எத்தனையோ மாணவர்களை வளர்த்தெடுத்து சாதிக்க வைத்திருக்கிறது. அதில் ஒருவன் மாரி.
‘வாழை’ மாரியின் முதல் கதை. ஆனால், நான் தான் வணிக ரீதியாக திரைப்படங்கள் எடுத்து வெற்றி பெற்றுவிட்டு அதன்பிறகு, இந்த ‘வாழை’யை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். அது இப்போது நடந்துவிட்டது. ஊர் என்ன சொன்னாலும் சொல்லட்டும் நீ செய்ய நினைப்பதை செய்துகொண்டேயிரு” என்று பேசியிருக்கிறார்.