சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க சென்னை போலீஸார் சர்வதேச போலீஸ் உதவியுடன் ரெட் கார்னர் நோடீஸ் அனுப்பி உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32), அவரது தந்தையான சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், அண்மையில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சிறையிலடைக்கப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீஸார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தலைமறைவாக உள்ள அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீஸார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கெனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.