இளம் வயதில் ஐசிசி சேர்மானாகும் ஜெய்ஷா – இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைக்கப்போகும் கோடி லாபம்

Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போதைய ஐசிசி சேர்மேனாக இருக்கும் கிரெக் பார்கலே தன்னை மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த பதவிக்கு விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி தலைவர் பதவியைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் என்ற அடிப்படையில் மூன்று முறை தொடர்ச்சியாக பதவி வகிக்க முடியும். கிரெக் பார்கலே இதன்படி இரண்டு முறை என நான்கு வருடங்கள் ஐசிசி சேர்மேனாக இருந்துவிட்டார். 

இன்னும் ஒரு இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் தொடரலாம் என்றாலும், தன்னை மூன்றாவது முறை நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜெய் ஷாவைப் பொறுத்தவரை தற்போது பிசிசிஐ செயலாளராக மட்டுமில்லாமல் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் (F&CA) துணைக் குழுவின் தலைவராக உள்ளார். அவருக்கு ஐசிசியில் பரந்துபட்ட அனுபவம் மற்றும் தொடர்புகள் உள்ளன. இதனால் அவர் இந்த பதவிக்கான வலுவான போட்டியாளராக மாறியுள்ளார். அவர் ஐசிசியின் தலைவராக பொறுபேற்கும்பட்சத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் கூடுதல் பலனை பெறப்போகிறது. குறிப்பாக நிதி வருவாயில் இந்திய கிரிக்கெட்டுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ஐசிசி நிதி வருவாய் இந்திய கிரிக்கெட்டை நம்பியே இருக்கிறது. பெருமளவு வருமானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்தியா சார்பில் கிடைத்தாலும், ஐசிசி மூலம் இந்தியாவுக்கு வருவாய் என்பதை சரியாக பங்கீடு செய்து கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்ப போட்டித் தொடர்கள் தீர்மானிப்பதிலும் சிக்கல் இருக்கிறது. இதனையெல்லாம் ஜெய்ஷா ஐசிசி தலைவராக இருக்கும்போது தீர்த்துக் கொள்ள இப்போது நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. 

ஐசிசி தலைவராக இருந்த இந்தியர்கள் : 

ஜக்மோகன் டால்மியா: இந்திய கிரிக்கெட்டில் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்த ஜக்மோகன் டால்மியா, ஐசிசி தலைவராக இருந்துள்ளார். 1997 முதல் 2000 வரை இந்தப் பதவியில் இருந்தார். 2001 முதல் 2004 வரை பிசிசிஐ தலைவராகவும் இருந்தார்.

சரத் பவார்: இந்திய அரசியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான சரத் பவார் ஐசிசி தலைவராகவும் இருந்துள்ளார். 2010 முதல் 2012 வரை இந்தப் பதவியில் இருந்தார். சரத் பவார் 2005 முதல் 2008 வரை பிசிசிஐ தலைவராகவும் இருந்தார்.

என் சீனிவாசன்: பிசிசிஐ தலைவராக இருந்த என் சீனிவாசன், 2014 முதல் 2015 வரை ஐசிசி தலைவராக பதவி வகித்தார். 2011 முதல் 2013 மற்றும் 2013 முதல் 2014 வரை பிசிசிஐ தலைவராகவும் இருந்தார்.

ஷஷாங்க் மனோகர்: பிசிசிஐ தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், ஐசிசி தலைவராகவும் ஆனார். அவர் 2015 முதல் 2020 வரை இந்தப் பதவியில் இருந்தார். ஷஷாங்க் மனோகருக்குப் பிறகு, இதுவரை எந்த இந்தியரும் ஐசிசியின் தலைவராகவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.