அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கட்டுப்பாட்டிற்காக எதிர்வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டில் ஆரம்ப சுகாதார சேவைக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுகாதார அமைச்சர்:
இலங்கை இன்று பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. இப்பிராந்தியத்தில் உயர் இரத்த அழுத்தம் மிக்க நாடாக இலங்கை மாறியுள்ளது.
வயது முதிர்ந்தவர்களின் சனத்தொகையில் 45 வீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறே வளர்ந்தவர்களின் சனத்தொகையில் 24 வீதமானவர்களுக்கு நீரிழிவு காணப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவினால் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகின்றது.
இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்ப சத்திர சிகிச்சை சேவையை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக எதிர்வரும் சில வருடங்களில் அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.