நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நீலகிரிக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையில் தொட்டபெட்டா அருகில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாகச் சென்ற பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
அந்த சமயத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் சென்ற பயணிகள் ஒன்றிணைந்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்துள்ளனர். இதேபோல் பந்தலூர் அருகில் உள்ள தேவாலா பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்திருக்கிறது. அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழை மேலும் தொடரும் வாய்ப்பு இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரிகள், “மரங்கள் விழுவதால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கீழ் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியில் சாலையோர ராட்சத அந்நிய மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
தொழிலாளி ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். பல குழுக்களாக மீட்பு பணியில் ஈடுபட வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்றனர்.