எனது பாதுகாப்பை திரும்பப் பெறுங்கள்…அதற்கு பதிலாக இதை செய்யுங்கள்- சுப்ரியா சுலே

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்திற்குட்பட்ட பத்லாப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மக்கள் பத்லாப்பூரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பூதாகரமாக வெடித்து வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாராமதி எம்.பி. சுப்ரியா சுலே கூறியிருப்பதாவது,

கடந்த சில மாதங்களாக மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. குடிமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கின்றனர் மற்றும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் அச்சத்தின் பரவலான சூழலை உருவாக்கியுள்ளன. பெண்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள், குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். குற்றவாளிகள் சட்டத்திற்கு பயப்படாமல் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.

எனவே எனது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெறுமாறு உள்துறை மந்திரியை கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களை பாதுகாக்க இந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் கூடுதலாக மாநிலம் முழுவதும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து உடனடியாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு தேவையில்லாதவர்கள் அதை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.