ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரேஷ் சந்திர கங்கோபாத்யாய் (92). இவர் தன் மனைவி ஆரதிக்காக (87) எஸ்பிஐ வங்கியில் 2017-ம் ஆண்டு நிரந்தர வைப்புத் தொகை கணக்குத் தொடங்கினார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு தன் மனைவியின் பாஸ்புக்கில் வரவு வைப்பதற்காக வங்கிக்குச் சென்றபோது, மனைவியின் கணக்கில் வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கணக்கு விவரங்களை முழுமையாக ஆய்வு செய்தபோது, இன்டர்நெட் பேங்கிங் மூலம் மனைவியின் கணக்கிலிருந்து ரூ.63.75 லட்சம் முறைகேடாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
அவர் தன் மனைவிக்கு கணக்குதிறக்கும்போது இன்டர்நெட் பேங்கிங் வசதியைக் கோரவில்லை. ஒப்புதல் இல்லாமலேயே எஸ்பிஐ வங்கி அவரது மனைவியின் கணக்கில் இன்டர்நெட் பேங்கிங் வசதியை வழங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்பிஐ வங்கியை எதிர்த்து அத்தம்பதியினர், 2019 -ம் ஆண்டு தெலங்கானா மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்தனர். அப்புகாரை விசாரித்த ஆணையம், முதிய தம்பதியினர் இழந்தத் தொகையை திருப்பி வழங்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது.
தெலங்கானா நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்திடம் எஸ்பிஐ மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் தேசிய ஆணையம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில், “முதிய தம்பதியினரின் ஒப்புதல் இல்லாமல் அவர்களது கணக்கில் இன்டர்நெட் பேங்கிங் வசதி வழங்கப்பட்டதால் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. அந்தத்தம்பதி இழந்த ரூ.63.75 லட்சத்தைபுகார் அளிக்கப்பட்ட ஆண்டில் இருந்து 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும். மேலும்ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும்” என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.