சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக திரும்புவார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது.
“சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் மிஷன் அல்லது ரஷ்யாவின் Soyuz கேப்ஸ்யூல் போன்றவற்றை பயன்படுத்தி அவர் பூமிக்கு திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
ஸ்பேஸ் மிஷனில் தொழில்நுடப் கோளாறுகள் ஏற்படுவது பொதுவான ஒன்றுதான். அது மாதிரியான நேரங்களில் நிச்சயம் மாற்று வழிகள் என்பது இருக்கும். அந்த வகையில் அவர் பூமிக்கு திரும்புவார் என நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய 60 ஆண்டுகளில் ஏவப்பட்டதை விட அதிகம். அதை கருத்தில் எடுத்துக் கொண்டு பார்த்தால் விண்வெளி துறையில் தனியார் அமைப்புகளின் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது” என அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.