கால் விலங்குகளை அகற்றி இந்தியாவில் பெண் கிரிக்கெட்டுக்கான சாளரங்களை மிதாலி ராஜ் திறந்தார் என்றால், அதனை மைதானத்தை நோக்கி இழுத்து வந்தது ஸ்மிரிதி மந்தனா என்னும் மின்சார காந்தமே.
கிரிக்கெட்… இந்தியாவில் இன்னொரு மதம். ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே பெரிதாக ஆராதித்த மதம். WPL, ஆண் கிரிக்கெட்டர்களுக்கு இணையான சம்பளம், இந்தியாவில் நடைபெற்ற முக்கியப் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் இலவசமாகத் தரப்பட்டது போன்றவற்றை எல்லாம் பிசிசிஐ முன்னெடுத்ததற்கான முக்கியக் காரணம்… அந்த வேறுபாடுகளை வேரறுக்கவே. அதனை ஓரளவு வெற்றிகரமாக செய்ய முடிந்ததற்கான காரணகர்த்தா, ஸ்மிரிதி மந்தனா. Crowd puller – கிரிக்கெட் ஆடும்போதே ஸ்மிரிதி பகுதிநேரப் பணியாகச் செய்து கொண்டிருப்பதும் இதைத்தான்.
`ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்பாக அவளேதான் இருக்கிறாள்’ என்று கூறப்படுவதுண்டு. உண்மையில், இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டுக்கான புலம் விரிவடைந்ததற்கான முக்கிய விசைகளில் ஒன்றாக ஸ்மிரிதியும் இருந்து வருகிறார்.
ஆஃப் சைட் ஆண்டவரான கங்குலியுடனான ஒப்பீடுகள்தான் ஸ்மிரிதியின் ஆரம்பக்கால அழுத்தமான அடையாளங்கள். கங்குலியின் அச்சில் வார்த்தது போன்ற ஸ்மிரிதியின் ஷாட்கள் ஒவ்வொன்றும் கொண்டாடப்பட்டன. இருவரும் ஒரே ஷாட்டை ஆடுவது போன்ற ஃப்ரேம்களும், கொலாஜுகளும் முடிவிலி அளவிற்குப் பகிரப்பட்டன. அவரையும் குமார சங்கக்காராவையும் தன்னுடைய ஆதர்ச நாயகர்களாக ஸ்மிரிதி மாற்றிக் கொள்வதற்கு முன்பிருந்தே, மேத்யூ ஹைடன்தான் அவரது ஆல்டைம் ஃபேவரைட். அதனால்தானோ என்னவோ மூன்று இடக்கை பேட்ஸ்மேன்களின் சாரங்களையும் அவருக்குள் பார்க்கலாம்.
சங்கக்காராவைப் பற்றி ஒருமுறை கவாஸ்கர், “அவர் ஒரு பேட்டிங் மேஸ்ட்ரோ. கிளாசிக்கல் கிரிக்கெட்டையும், நவீன ஸ்ட்ரோக் ப்ளேவினையும் இணைத்து அவரது பேட் புனையும்” என்றார். ஸ்மிரிதியையும் இதே வட்டத்திற்குள் நீங்கள் பொருத்தலாம். எனினும், அவர்களைப் போல் ஆடி தனது தனித்தன்மையை இழக்காமல் தனது சுயத்தை உலகுணர வைத்ததுதான் அவருக்கான சிறகாகி அவரை மேலெழும்ப வைத்தது. ஆங்கரிங் ரோலையும் அக்ரஷிவ் கிரிக்கெட்டையும் சமயத்திற்கு ஏற்றாற் போல் ஆடுவதை தனது பாணியாக மாற்றிக் கொண்டார் ஸ்மிரிதி.
நீலகிரி மலை ரயிலின் எழிலோடு உங்களைப் பயணிக்க வைப்பார், புல்லட் டிரெயினுக்குள்ளும் உங்களை தலைசுற்ற வைப்பார். உண்மைதான்! சந்தேகம் இருந்தால், அணிக்கு அரணாய் பொறுமையாக நின்று 2021-ல் ஆஸ்திரேலியாவில் பிங்க் பால் டெஸ்டில் அவர் அடித்த சதத்தையும், 2019-ல் வெல்லிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக ஸ்மிரிதி 24 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த இன்னிங்ஸையும் ஒருமுறை பார்த்து விட்டு வாருங்கள். இதில் இன்னமும் வசீகரம் கூட்டுவது… பேட்டுக்கே வலிக்காதது போன்ற அவரது Effortless ஷாட்களும், ஆஃப் சைடையும் லெக் சைடையும் தனதாக்கும் ஆதிக்கமுமே.
நடனத்தில் மட்டுமல்ல… கிரிக்கெட்டிலும் ஃபுட் வொர்க்தானே ஆதாரம்! அதிலும், பேக் ஃபுட்டில் ஆடும் கிரிக்கெட்டர்களே அபூர்வம்தான். கேன் வில்லியம்சனின் பேக் ஃபுட் ஷாட்களில் தன்னைத் தொலைத்தவர்கள் சற்றே மீண்டு ஸ்மிரிதியின் பேக் ஃபுட் ஷாட்களைக் காண நேர்ந்தால் அதற்குள் தன்னை மொத்தமாகத் தொலைப்பார்கள். அந்தளவிற்கு, ஆரம்பத்தில் பேக் ஃபுட் பிளேயராகவே ஆடிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அதிலும் மாற்றத்தை மேற்கொண்டார். ஒரு பந்தை எதிர்கொள்ளும்போது, ஃப்ரென்ட் ஃபுட்டில் இருந்து பேக் ஃபுட்டுக்கு மாறுவது எளிது; பேக் ஃபுட் டு ஃப்ரென்ட் ஃபுட்டுக்கு வேகமாக மாறுவதற்குச் சாத்தியக்கூறுகள் ஏறக்குறைய இல்லை என்பதை உணர்ந்தே, மணிக்கணக்கான பயிற்சியின் வாயிலாக அந்த திருத்தத்தை நேரச் செய்தார். இது, பேக் ஃபுட் ஷாட்கள், ஃப்ரென்ட் ஃபுட் ஷாட்கள் இரண்டையுமே சிறப்பாக ஆடும் நிபுணத்துவத்தை அவருக்கு உண்டாக்கியது. களமும், வீசப்படும் பந்தும் என்ன கேட்கிறதோ அது ஸ்மிரிதியிடமிருந்து வெளிப்படும்.
`கேம் சென்ஸ்’ அவருக்கு இயல்பாகவே அமையப் பெற்றது. அவரைப் பொறுத்தவரை, சின்ன சின்ன மாற்றங்கள் ஆட்டத்தில் மிகப்பெரிய ஏற்றங்களைக் கொண்டு வருமென தெளிவாகப் புரிந்தவர். அதனால்தான், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது ஸ்டான்ஸில் இருந்து, க்ரிப் மற்றும் பேக் லிஃப்ட் வரை எல்லாமே மாறி இருக்கிறது.
ஆரம்பக்காலகட்டத்தில் ஸ்மிரிதியின் பேக் லிஃப்ட் இன்னமும் கொஞ்சம் உயரமாக இருந்தது. அது, அவரது பவர் ஹிட்டிங்கிற்கும் உதவியது. ஆனால், ஒரு காலகட்டத்திற்கு மேல் பேக் லிஃப்டை சற்றே தணித்துபந்திற்கு ஏற்றாற்போல் உடனே ரியாக்ட் செய்வதற்கான கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனால், பவர் ஹிட்டிங்கில் ஏற்பட்ட இழப்பை டைமிங்கால் நேர்ப்படுத்திக் கொண்டார்.
Kia Super League-ல், ஒருமுறை முதலில் ஒருசில போட்டிகள் அவரால் பந்தை சரியாக டைமிங் செய்ய முடியவில்லை. தனது பேட்டிங்கில் எங்கோ சின்னதொரு தவறு இருக்கிறது என்பது மட்டும் புரிந்ததே ஒழிய எது என்பது அவருக்கு விளங்கவில்லை. பொதுவாக, வீடியோ அனாலிஸ்டுகள் இந்த சமயத்தில் உதவிக்கு வருவார்கள். ஆனால், ஸ்மிரிதி அதனையும் தானாகவே சரி செய்தார். தான் ஆடிய வீடியோக்களை லூப் மோடில் ஓடவிட்டு தனது Bottom Hand Grip-ல் தன்னையறியாமல் நேர்ந்திருந்த புதிய மாற்றம்தான் காரணம் என்பதைப் புரிந்து அதனை சரிசெய்யவும் செய்தார். இது, உடனே அவரை பேக் டு ஃபார்ம் கொண்டு வந்தது. வல்லவர்களுக்கு அடிப்படை ஃபார்முலாவே இதுதான்… விழுந்த சுவடே தெரியாமல் எழுந்து நிற்பது. ஸ்மிரிதியும் அதைத்தான் செய்தார். கன்சிஸ்டன்ஸியோடு தொடர்ந்து எல்லாப் போட்டிகளிலும் ஸ்கோர் செய்ய முடிவதும் இந்தக் காரணத்தினால்தான்.
கால ஓட்டம், தன்னோடு வேகமெடுக்க முயலாதவர்களை கரைத்து காணாமல் போகச் செய்யும். அப்டேட் செய்து கொள்வது அதிமுக்கியம். ஸ்மிரிதி முந்தியிருப்பதற்கும் இதுவே காரணம். சமீபத்திய ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஸ்மிரிதியின் அந்த Paddle Shot பவுண்டரி, மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த ஷஃபாலி வர்மாவை மட்டுமல்ல… ரசிகர்கள் பலரையும் குழந்தையாய்க் குதூகலிக்க வைத்தது. லாஃப்டட் ஷாட்கள் மட்டுமல்ல, டி20 கிரிக்கெட்டிற்கே உரித்தான ஷாட்களில் தேர்ச்சி பெற தொடர்ந்து முயல்வதுதான் ஸ்மிரிதியை 7000 சர்வதேச ரன்களுக்கு மேல் கடக்க வைத்திருக்கிறது.
கிளாசிக்கல் கவர் டிரைவ், வேகப்பந்து வீச்சாளருக்கு எதிரான, அவருக்குப் பிடித்தமான அவரது ஃப்ரென்ட் ஃபுட் டிரைவில் தொடங்கி Ramp, Scoop என அணிவகுக்க வைப்பதோடு ஸ்வீப் ஷாட்களையும் அனாயசமாக ஆடுவார். இதுதான் வேகப்பந்து வீச்சு, சுழல்பந்து வீச்சு ஆகிய இரு கத்திவீச்சுகளையும் அசாத்தியமாக சமாளிக்க அவருக்கு உதவுகிறது. ஷார்ட் பால்களை சமாளிப்பதற்காக அவர் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டதுதான் புல் ஷாட். இன்றைய தேதியில் ஆண்கள் கிரிக்கெட்டில் ரோஹித்தின் புல் ஷாட் தரும் அதே போதையை பெண்கள் கிரிக்கெட்டில் ஸ்மிரிதியின் புல் ஷாட்டும் ஏற்படுத்தும்.
ஒருநாள் போட்டிகளிலும் சரி, டி20யிலும் சரி அவரது ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இரண்டுமே இந்தியாவில்விட அயல்நாடுகளில்தான் அதிகம். அந்தளவு எந்தச் சூழலையும் சமாளிப்பவர். இவ்வளவு ஏன்… 2013-ல் இருந்து கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தும்கூட, முன்னதாக ஆறு சர்வதேச சதங்களை விளாசியிருந்தும்கூட மந்தனாவின் முதல் ஹோம் சதம் இந்தாண்டு, அதுவும் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான் வந்தது. நிஜம்தான்! சச்சினின் நூறாவது சதத்திற்கும் கோலியின் 71-வது சதத்திற்குமான காத்திருப்பை மிஞ்சியது இது. இருப்பினும் முதல் சதம் அடித்தபின் அதற்கடுத்த போட்டியிலும் சதம் அடித்து வருடக்கணக்கான ஏக்கத்திற்கு ஆறுதல் தந்துவிட்டார்.
2017 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது 90 ரன்கள், 2016 ஐசிசியின் பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் அவரது 102 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களது மண்ணில் வைத்து 2018-ல் அவர் அடித்த 135 ரன்கள் என ஒவ்வோர் இன்னிங்ஸும் காலத்திற்கும் நின்று பேசும். குறிப்பாக, 2018-ல் நாக்பூரில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது அந்த 86 ரன்கள் இன்னிங்க்ஸ் ஈடு இணையற்றது. சவாலான ஆடுகளத்தில் அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் திறனையும் நுணுக்கங்களையும் கூட்டாக வெளிக்கொணர்ந்த இன்னிங்க்ஸ் அது.
சேஸிங்கில் தொடர்ந்து பத்து போட்டிகளில் 50+ ஸ்கோர், இருமுறை ஐசிசியின் சிறந்த பெண் கிரிக்கெட்டர் விருது, பெண்கள் டி20-ல் இந்தியாவை வழிநடத்திய முதல் இளம் கிரிக்கெட்டர், ஆர்சிபிக்கான முதல் கோப்பையைப் பெற்றுத் தந்த பெருமை, WPL-க்கு முன்னோடியான உமன்ஸ் டி20 சேலஞ்சில் தனது ட்ரெய்ல்பிளேசர் அணியை சாம்பியனாக்கியது, இந்தியாவின் WPL தவிர்த்து மற்ற நாடுகளின் லீக்களிலும் ஆடி அதில் தனக்கான தடத்தைப் பதித்த வல்லமை என வீராங்கனையாகவும் கேப்டனாகவும் தனது திறமையை பல சந்தர்ப்பங்களில் ஸ்மிரிதி நிரூபித்து விட்டார். தடுமாற்றங்களும் தோல்விகளும் அவருக்கும் வராமல் இல்லை அவரை மூழ்கடிக்க முயலாமல் இல்லை. எல்லாவற்றையும் தனது பேட்டினையே துடுப்பாக ஆக்கி துடிப்போடு ஸ்மிரிதி கடந்து வந்திருக்கிறார். சாதிக்கும் வேட்கை ஒவ்வொரு பெண்ணுக்குமான சமகால ஆற்றல் மற்றும் உத்வேக மூலம் அவர்.
மிதாலி ராஜ், சார்லொட் எட்வர்ட்ஸ், பெலிண்டா கிளார்க், எல்லீஸ் பெர்ரி இவர்களுக்கும் ஒருபடி மேலே போய் பெண்கள் கிரிக்கெட்டினை இழுத்துச் செல்லும் வடமாக ஸ்மிரிதி வலம் வருகிறார். இனிமேல் பெண்கள் கிரிக்கெட்டிற்குள் காலடி வைப்பதற்கே ’கனா’ திரைப்படம் அளவிற்கு போராட வேண்டுமென்ற அவசியம் பெண் பிள்ளைகளுக்கு இருக்காது. அதற்கான சுலபமான வழிப்பாதையை ஸ்மிரிதி இந்தியாவில் ஏற்படுத்தி விட்டார்.
தனக்கான அடையாளத்தை உருவாக்குவது ஒரு வெற்றியாளர் செய்வது என்றால், தான் சார்ந்த துறைக்கான முகவரியையே பெற்றுத் தருவதுதான் ஒரு சாதனையாளர் நிகழ்த்துவது. ஸ்மிரிதி இரண்டாவது வகை.
– மஞ்சுளா தேவி