புதுடெல்லி: இந்தியா மற்றும் மலேசியா நாடுகளிடையே டிஜிட்டல் மயமாக்கம், ராணுவ பாதுகாப்பு தளவாட உற்பத்தி, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:
இந்தியா – மலேசியா இடையோன வர்த்தக ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இருதரப்பு பொருளாதார நடவடிக்கைகளில் அதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
எனவே, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத் தப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் மயமாக்கம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, செமிகண்டக்டர், ஏஐ துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பைஅதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.இருதரப்பு வர்த்தகத்தில் நிலையானமுன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 பில்லியன் டாலர் மதி்ப்புள்ள முதலீடுகள் வந்துள்ளன. இருதரப்பும் அவரவர் நாணயங்களில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளோம். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் கூறுகையில், “மலேசியாவும், இந்தியாவும் பன்முக கலாச்சாரம் மற்றும் பல மத நம்பிக்கைகொண்ட நாடுகளாக விளங்குகின்றன. இருநாடுகளுக்கும் இடையிலான பொதுவான தன்மை என்பது வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு அப்பாற்பட்டவை. ஜவஹர்லால் நேரு-துங்கு அப்துல் ரஹ்மான் காலத்திலிருந்து மலேசியாவும், இந்தியாவும் நல்லுறவை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. அந்தவகையில், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி, எல்லையை பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கை உட்பட அனைத்திலும் ஒத்துழைப்பைஅதிகரித்து ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.
இந்திய தொழிலாளர்களின வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புஉட்பட இருதரப்புக்கும் இடையேஎட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக இந்தியாவின் யுபிஐ, மலேசியாவின் பேமண்ட் நெட்வொர்க்குடன் (பேநெட்) இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.